உயர்வுக்கு படி நிகழ்ச்சி உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன
*கலெக்டர் தங்கவேல் தகவல்
கரூர் : உயர்கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குவிந்து கிடப்பதாக உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கலெக்டர் தங்கவேல் தகவல் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் 2024-2025ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கான உயர்வுக்குப்படி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கல்வியில் மட்டுமல்லாமல், தங்களுடைய வாழ்க்கையிலும் சிறந்த வெற்றியாளர்களாக உருவாக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய நான் முதல்வன் என்ற புதுமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உயர்வுக்குப் படி என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-2025ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு பயின்று உயர்கல்வியில் சேராத மாணாக்கர்களுக்காக உயர்வுக்குப் படி என்ற நிகழ்ச்சி வருவாய் கோட்டம் வாரியாக ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் 69 அரசு, அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 71 மாணாக்கர்களுக்கான உயர்வுக்குப் படி நிகழ்ச்சி இன்றைய நடைபெறுகிறது. பெற்றோரின் பொருளாதார சூழ்நிலை, உயர்கல்வி பயில விருப்பமின்மை மற்றும் பிற காரணங்களால் உயர்கல்வியில் இணைந்து உயர்கல்வி படிக்க இயலாத மாணாக்கர்களின் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு இந்நிகழ்ச்சியின் வாயிலாக உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் மூலம் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஐடிஐ, கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. தற்பொழுது இக்கல்வி நிறுவனங்களில் பல்வேறு இடங்கள் காலியாக உள்ளது. எனவே மாணாக்கர்கள் உடனடியாக அவர்களுடைய விருப்பப் பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுத்து உடனடியாக உயர்கல்வியில் சேர வேண்டும்.
உயர்கல்வியில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அரசுப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வியில் சேர்ந்து கல்வி பயிலும் போது அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது குறித்தும், தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவது குறித்தும், குடும்ப சூழ்நிலையால் உயர்கல்வி தொடர முடியாதவர்களுக்கு உரிய ஆலோசனைகளும் தொடர்புடைய துறை வல்லுநர்களால் வழங்கப்படுகிறது. இது தவிர, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களைக்கொண்டு இன்று காலை முதல் மாலை வரை இந்த முகாம் மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கல்வி ஒன்றே மாணவர்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும், தொடர்ந்து முயற்சித்தால் இங்கு வருகை புரிந்துள்ள அனைவரும் தங்கள் வாழ்வில் சாதிக்க முடியும். அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதுணையாக இருக்கும். உயர்கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குவிந்து கிடப்பதாக கலெக்டர்தெரிவித்தார்..
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் செல்வமணி, உதவி ஆணையர் கலால் .முருகேசன், அரசினர் பாலிடெக்னிக் முதல்வர் லோகநாதன், செட்டிநாடு பொறியியல் கல்லூரி பேராசிரியர் கோபிநாத், அரசு மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் அறிவழகன் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உயர் கல்வி சேர்க்கை ஆணை
கரூர் மாவட்டத்தில் 3 முகாம்கள் மூலம் மொத்தம் 368 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இதில் 62 மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்வதற்கு உடனடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.