ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்: உபி மளிகை கடைக்காரர் அதிர்ச்சி
புலந்த்சாஹர்: உபி மளிகை கடைக்காரருக்கு ரூ.141 கோடி பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது. பான் எண்ணை யாரோ தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார். உபி மாநிலம் குர்ஜாவில் உள்ள நயாகஞ்ச்சை சேர்ந்தவர் சுதிர். இவருக்கு ரூ.141 கோடி பண பரி வர்த்தனைகள் தொடர்பாக வருமான வரி செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மளிகைக்கடைக்காரர் சுதிர் கூறுகையில், என்னுடைய வீட்டில் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறேன். கடந்த 2022ம் ஆண்டு வருமான வரி செலுத்தும்படி எனக்கு நோட்டீஸ் வந்தது. நான் உடனே வருமான வரித்துறை அதிகாரிகளை சந்தித்து அந்த நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கமளித்தேன்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 10ம் தேதி ரூ.141 கோடி பரிவர்த்தனைக்கு வரி செலுத்தும்படி மீண்டும் நோட்டீஸ் வந்தது. இதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். டெல்லியில் பல்வேறு நிறுவனங்களை தொடங்குவதற்கு எனது பான் எண்ணை பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார். அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலும் போலி நிறுவனங்களைத் திறக்க, வங்கிக் கணக்குகளைத் திறக்க அல்லது வரிகளைத் தவிர்ப்பதற்காக பான் கார்டு மோசடிகள் நடக்கின்றன.வருமான வரி நோட்டீஸ் வரும்போது தான் இது பற்றி தெரிய வரும் என்றனர்.