வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு சிபிஐ கோர்ட்டில் ஜெகன்மோகன் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆஜர்
திருமலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி நேற்று சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆஜரானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பதவியை இழந்த ஜெகன்மோகன்ரெட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரு, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அல்லது ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளியில் உள்ள சொகுசு பங்களாவில் மாறிமாறி தங்கி வருகிறார்.
இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக நாம்பள்ளி சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தில் நேற்று ஜெகன்மோகன் ஆஜரானார். அவரது வருகை குறித்து அறிந்த ஆதரவாளர்கள் கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
இதனையொட்டி முன்கூட்டியே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஜெகன்மோகன் ஆதரவாளர்களை கோர்ட்டிற்குள் நுழையாதவாறு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக ஜெகன்மோகன் வரும் பாதையில் நடிகர் அல்லுஅர்ஜுன் நடித்த `புஷ்பா 2’ படத்தில் வரும் `ரெப்பா ரெப்பா’ என்ற வசனத்துடன் கூடிய ப்ளெக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர்.
அதில் வரும் 2029ல் ‘ரெப்பா ரெப்பா’ என குறிப்பிட்டிருந்தனர். ஜெகன்மோகனுடன் ஏராளமான தொண்டர்கள் மற்றும் சில போலீசாரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜரான ஜெகன்மோகன் ரெட்டி, அங்குள்ள வருகை பதிவில் கையெழுத்திட்டார். தொடர்ந்து அங்கிருந்து தனிவிமானம் மூலம் தாடேப்பள்ளிக்கு சென்றார்.