வருமானத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிப்பு: வருமான வரித்துறை
சென்னை: வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி, தாமதமாக வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்கான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதி சி.சரவணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராதம் விதித்து 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தார். வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்-க்கு அபராதம் விதித்து சரிதான்.
அதனால் அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, இதேபோன்ற ஒரு வழக்கில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை தாக்கல் செய்ய விஜய் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.