கோவை டூ குமரி... வருமானம் தரும் வல்லாரை கீரை!
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள மேல்
கரையை சேர்ந்த அய்யாத்துரை தனது வீட்டின் அருகே உள்ள 44 சென்ட் நிலத்தில் செவ்விளநீர் என்கிற சிவப்புத் தென்னையை சாகுபடி செய்து நல்ல வருவாய் பார்த்திருக்கிறார். இயற்கை சீற்றத்தால் அந்த மரங்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வருவாய் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் வாழை, வல்லாரை கீரை ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்து தினமும் ரூ.1000 வரை வருமானம் பார்க்கிறார். ஒரு காலைப்பொழுதில் தனது தோட்டத்தில் வல்லாரை கீரைகளை அறுவடை செய்து விற்பனைக்காக எடுத்து செல்ல தயாராய் இருந்த அய்யாத்துரையைச் சந்தித்துப் பேசினோம். `` எனது வீட்டின் அருகே 44 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 30 வருடத்திற்கு முன்பு சிவப்புத் தென்னை (செவ்விளநீர்) சாகுபடி செய்தேன். 3 வருடத்தில் இருந்து இளநீர் கிடைக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு மரங்களுக்கு இடையே குழி வெட்டி சாணம், தென்னையில் இருந்து கிடைக்கும் மட்டைகள் மற்றும் ஓலைகளை உரமாக போட்டுவைப்பேன். மழை பெய்யும்போது சாணத்துடன் போட்டுள்ள தென்னை ஓலைகள், மட்டைகள் நீரை உள்ளிழுத்து வைத்துக்கொள்ளும். இதனால் மழை இல்லாத நேரத்திலும், தென்னைக்கு தேவையான நீர் கிடைத்துவிடும்.
இளநீரை மாதம்தோறும் வெட்டி விற்பனை செய்து வந்தேன். இதன்மூலம் மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் வரை வருமானம் கிடைத்து வந்தது. இந்த நிலையில் ஒக்கி புயல் தாக்கியதால், எனது தோட்டத்தில் நின்ற தென்னை மரங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. காய்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இதனை வெட்டி இளநீராக விற்பனை செய்தால் வெட்டுகூலி கொடுத்ததுபோக மீதம் ஒன்றும் மிஞ்சாது. இதை லாபகரமாக மாற்ற என்ன செய்யலாம் என யோசித்தேன். அப்போது ஒரு யோசனை தோன்றியது. காயை இளநீருக்காக வெட்டாமல், தேங்காய் ஆனபிறகு வெட்டி, முளைக்க வைத்தேன். அவற்றை கன்றுகளாக விற்கத் தொடங்கினேன். இப்போது ஒரு தென்னங்கன்று ரூ.150 என விற்பனை செய்து வருகிறேன். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.
44 சென்ட் நிலத்தில் உள்ள தென்னைகள் பாதிக்கப்பட்டதால், தென்னையின் உள்ளே ஊடுபயிராக வாழை சாகுபடி செய்தேன். மட்டி, ரசகதளி, பூங்கதளி உள்ளிட்ட ரக வாழைகளை நட்டேன். இந்த வாழைகள் வெயில், மழையை தாங்கி வளரக்கூடியவை. ஒரு வாழை மரத்தில் இருந்து குலைகளை வெட்டினால், சில மாதங்களில் அந்தத் தாய்வாழையின் மூட்டில் இருந்து புதிதாக வாழைக்கன்றுகள் முளைக்க ஆரம்பிக்கும். பின்பு அவை வளர்ந்து குலைகள் வைக்கத் தொடங்கும். இவ்வாறு தொடர்ச்சியாக வாழைக்குலைகள் கிடைக்கும். தற்போது நாங்கள் இந்த வாழை மரங்களுக்கு எந்தவித உரமும் போடுவதில்லை. ஏற்கனவே நாங்கள் தென்னைகளுக்கு அதிக அளவிலான உரங்களை வைத்ததன் மூலம் மண்ணின் வளம் நன்றாக இருப்பதே இதற்கு காரணம். சில நேரங்களில் இலை தழைகளை வாழைமரங்களின் அடிப்பகுதியில் உரமாக போட்டு மக்க வைப்போம்.
ஒருமுறை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வேளாண்மை பயிற்சிக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கு வல்லாரை செடிகளைப் பார்த்தேன். அவை எனக்கு கொஞ்சம் வித்தியாசமானதாக தெரிந்தது. பொதுவாக வல்லாரை கீரை சிறிய அளவில் வட்டமான இலைகளைக் கொண்டிருக்கும். இந்தக் கீரைகள் நீர் உள்ள இடங்களில் அதிக அளவில் காணப்படும். குளிர்ச்சி நிறைந்த இந்தக்கீரை மருத்துவக்குணம் மிக்கது என்பதால் குமரி மாவட்ட மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான் பார்த்த வல்லாரை கீரை, சற்று பெரிய அளவிலான இலைகளுடன் வளர்ந்து நின்றது. இது புதிதாக தெரிந்ததால், ஒரு செடியை எடுத்து வந்து எனது தென்னந்தோப்பில் நட்டு வைத்தேன். அந்தச் செடி ஒரு சில மாதங்களில் தோப்பின் ஒரு பகுதியில் படர்ந்து செழித்து வளரத்தொடங்கியது. அதற்கு எந்த வித உரமோ, தண்ணீரோ கொடுக்கவில்லை. இப்போது எங்கள் தோட்டத்தில் வல்லாரைக்கீரைகள் நன்றாக செழித்து வளர்ந்து பலன் தருகின்றன. வாரத்தில் 3 நாட்கள் வல்லாரை கீரையை அறுவடை செய்து வடசேரி உழவர் சந்தையில் காலை வேளையில் விற்பனை செய்கிறேன். தினமும் 25 கட்டுகள் கொண்டுவருவேன். அவற்றை ரூ.500க்கு விற்பனை செய்துவிடுவேன். அதனுடன் தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களையும் வெட்டி எடுத்து சென்று விற்பனை செய்வேன். இதன் மூலமும் எனக்கு வருமானம் கிடைத்து வருகிறது. தென்னந்தோப்பில் ஊடுபயிராக வளர்ந்துள்ள வாழை மற்றும் வல்லாரை கீரை மூலம் தினமும் ரூ.1000 வரை வருமானம் பார்க்கிறேன்’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தொடர்புக்கு:
அய்யாத்துரை: 97860 13971.