ரூ.36 கோடி வருமான வரி நோட்டீஸை எதிர்த்த ஜெ.தீபா மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி..!!
சென்னை: ரூ.36 கோடி வருமான வரி நோட்டீஸை எதிர்த்த ஜெ.தீபா மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானவரி வழக்கில் ரூ.36 கோடி பாக்கி இருப்பதாகவும் அதனை செலுத்த வேண்டும் என்று அவரது சட்ட பூர்வ வாரிசான சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தீபாவிற்கு வருமானவரித்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு நடைபெற்றது. ஜெயலலிதாவின் வருமானவரி சேவை ரூ.36 கோடியிலிருந்து 13 கோடியாக குறைத்து திருத்தியமைக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ரூ.36 கோடி செலுத்தக்கூடிய வருமானவரி துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என கூறி தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் எனவும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.