மிரட்டலான வருமானம் தரும் மேச்சேரி ஆடுகள்!
சேலத்தில் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று மேச்சேரி. இந்த பகுதியில் இயங்கும் மேச்சேரி சந்தையும் வெகுபிரபலம். அதற்கு முக்கிய காரணம் இந்தப் பகுதியில் வளரும் மேச்சேரி ஆடுகள். இங்கு விற்பனையாகும் ஆடுகளை வாங்கிச்செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். இந்த மேச்சேரி ரகம் தோற்றத்திலேயே பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்துவிடும். நீளமான கால், உறுதியான உடல், பால்-மாமிசம் இரண்டிற்குமே ஏற்ற தன்மை, அதிக நோய் எதிர்ப்பு சக்தி என பல சிறப்பம்சங்கள் மேச்சேரி ஆடுகளின் சிறப்பை பல ஊர்களில் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மேச்சேரி ஆடு வளர்ப்பில் கில்லியாக இருக்கும் ரகுபதி என்பவரைச் சந்தித்தோம்.
``மேச்சேரிதான் எனக்கு பூர்வீகம். பத்து வருடத்திற்கு முன்பு வரை நெசவுத்தொழில் செய்து வந்த நான் தற்போது மேச்சேரி ரக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். அதற்கு காரணம் இதில் கிடைக்கும் வருமானம்தான். ஆடுகளை வாங்குவது, பராமரிப்பது, விற்பது என்பது இங்குள்ளவர்களுக்கு ஒரு மரபான வழக்கம். மேச்சேரி சந்தையில் காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூட்டம் அலைமோதும். சேலம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மேச்சேரி ரக ஆடுகளை வாங்க குவிந்துவிடுவார்கள்.
நான் 2014ல் இருந்து ஆடுகளை வளர்க்கத் தொடங்கினேன். எங்கள் ஊரிலேயே 40 ஆடுகள், கரூரில் இருந்து 10 ஆடுகள் என 40 ஆடுகளோடு பண்ணையைத் தொடங்கினேன். இவை அனைத்துமே மேச்சேரி ரகம்தான். இன்றைக்கு ஒரு மாதத்திற்கு 1000 வரை ஆடுகள் விற்பனையாகிறது. நான் ஆடுகளில் கிடாவை மட்டும்தான் வளர்த்து வருகிறேன். சேலம், மேச்சேரி, பொள்ளாச்சி, ஈரோடு, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 மாத ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்து வளர்த்து ஆறு மாத கிடாய்களாக விற்பனை செய்கிறேன். நான் வாங்கி வரும் அனைத்து ஆடுகளையும் மேய்ச்சலில் இருப்பவையாக பார்த்து வாங்கி வருவேன். அப்போது ஆடுகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கும். இல்லையென்றால் ஆடுகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். ஒரு ஆடு பாதிக்கப்பட்டாலும் அது மற்ற ஆடுகளையும் தாக்கும். ஆகையால் நாங்கள் ஆடுகளை பார்த்து பார்த்து வாங்கி வந்து வளர்க்கிறோம்.
முதலில் தாய், சேய் என்று இரண்டையும் வைத்துதான் வளர்க்க முடிவு செய்தேன். ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாகவும், அதிக லாபம் பார்க்காமல் சரியான விலைக்கு நம்ம ஊர் ரக ஆடுகளை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கிடாய் ஆடுகளை மட்டும் வாங்கி வந்து வளர்த்து விற்பனை செய்கிறேன்.
ஆடுகளுக்கான ஷெட்டை 17x52என்ற அளவில் அமைத்துள்ளேன். முதலில் கோழிகளை வளர்த்து வந்ததால் ஆடுகளை பரண் அமைத்து வளர்த்தேன். வேலைப்பளு அதிகம் இருந்ததால் கோழி வளர்ப்பை நிறுத்திவிட்டேன். ஆனால் இன்றைக்கும் ஆடுகளை பரண் அமைத்துதான் வளர்க்கிறேன். பரண் அமைத்து ஆடுகளை வளர்ப்பதால் நோய் தாக்காமல் இருக்கிறது. அதேபோல் உண்ணி போன்ற ஒட்டுண்ணி தொந்தரவும் ஆடுகளுக்கு இருப்பதில்லை. ஒட்டுண்ணி மற்றும் அசுத்தம் காரணமாக ஆடுகளுக்கு அதிக ஒவ்வாமை ஏற்படும். இதனை சரிசெய்ய காலை, மாலையில் பண்ணையை சுத்தம் செய்து விடுவேன். இந்த முறையை நாங்கள் கடைபிடிப்பதன் மூலம் ஆடுகளை நோய்களில் இருந்து பாதுகாக்கிறோம். வருடம் ஒருமுறை ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியை அரசு கால்நடை மருத்துவர் மூலம் போடுகிறோம். இந்த தடுப்பூசியை மழைக்காலம் தொடங்குவதற்கு முன் போட வேண்டும். மேலும் 3 மாதத்திற்கு குடல்புழு நீக்க மருந்தையும் ஆடுகளுக்கு வழங்கி வருகிறோம். இந்த மருந்துகள் கொடுத்த 3 மணி நேரம் வரை ஆடுகள் எந்தவொரு தீவனத்தையும் சாப்பிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அடுத்தமுறை குடல் புழு நீக்கத்திற்கு இந்த மருந்தினை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். இதற்கு மாற்றாக வேறொரு மருந்தை பயன்படுத்துகிறோம்.
ஆடுகளுக்கு திட உணவு, வைக்கோல், பச்சைப்புல், கடலை புண்ணாக்கு ஆகியவற்றைக் கொடுப்போம். இந்தத் தீவனத்தை நன்கு வளர்ந்த ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 கிலோ கொடுப்போம். இதுபோக எனது பண்ணையில் உள்ள ஆடுகளுக்கு வேலிமசால், முயல்மசால், குதிரை மசால் கொடுக்கிறோம். அடர்தீவனமாக உடைத்த சோளம் கொடுப்பேன். இதன்மூலம் ஆடுகள் நல்ல ஊட்டமாக வளரும். வாரம் ஒருமுறை ஆடுகளின் கழிவுகளை எடுத்து அருகில் இருக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பேன். இது நல்ல உரமாகவும், ஒரு நல்ல பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.6 மாத ஆட்டுக்குட்டிகளை ரூ.6500 என்ற விலையில் விற்பனை செய்வேன். ஒரு மாதத்திற்கு எப்படியும் 700 குட்டிகள் வரை விற்பனை ஆகும். பக்ரீத், ரம்ஜான் பண்டிகைகளின்போது விலை அதிகமாகவே கிடைக்கும். ஆடுகளை விற்பதன் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.45 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இதில் ஆட்டுக்குட்டிகள் வாங்கிய செலவு
ரூ.35 லட்சம். பராமரிப்பு, தீவன செலவு, வேலையாட்கள் கூலி, வண்டி வாடகை, மருத்துவச்செலவு என ரூ.9 லட்சம் செலவாகும். இதுபோக ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும்’’ என்கிறார் ரகுபதி.
தொடர்புக்கு:
ரகுபதி: 63837 05989.