சூப்பர் வருமானம் தரும் சோற்றுக்கற்றாழை!
கரூரில் இருந்து கோவை செல்லும் வழியில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தென்னிலை தெற்கு கிராமம். ஒரு காலத்தில் காய்கறிப்பயிர்கள், வேர்க்கடலை, சிறுதானியம் என தொடர் விவசாயம் நடந்த ஊர். தற்போது நீர் பற்றாக்குறை, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் விவசாயத்தொழில் தேக்கம் அடைந்திருக்கிறது. இருந்தபோதும், ஆடு, மாடு, கோழி என கால்நடை வளர்ப்பில் முத்திரை பதிக்கிறது இந்தக் கிராமம். தரிசு நிலமாகவும் வறண்ட நிலமாகவும் காட்சி அளிக்கிற இந்த ஊரின் ஒரு சிறப்பு அடையாளமாக மாறி வருகிறது வினோபா இயற்கை வேளாண் பண்ணை. ஆடு, மாடு, பல வகை பயிர்கள், தீவனப்புற்கள், பிரண்டை, கற்றாழை என இந்தப் பண்ணை முழுக்கவே விவசாயம் செழித்துக் கிடக்கிறது. தரிசு நிலத்தில் இப்படி ஒரு இயற்கை பண்ணையா...? என பலரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இந்தப் பண்ணையை உருவாக்கி இருக்கிறார் செல்லமுத்து என்ற விவசாயி. வினோபா பண்ணையைக் காண்பதற்கும் செல்லமுத்துவின் விவசாய முறையைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் ஒரு காலைப்பொழுதில் அவரது தோட்டத்திற்குச் சென்றோம். எங்களை வரவேற்ற செல்லமுத்து பண்ணையைச் சுற்றிக் காண்பித்தபடி பேசத் தொடங்கினார்.
``பல தலைமுறையாகவே எங்களுக்கு விவசாயம்தான் தொழில். கால்நடை வளர்ப்பு, காய்கறி சாகுபடி என அப்பா காலத்தில் எல்லா விவசாயமும் செய்து வந்தோம். சிறுவயதில் இருந்தே விவசாயம் பார்த்து வளர்ந்ததால், எனக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். அதனாலே, கல்லூரி படிப்பு முடித்தபிறகு வெளியே வேலைக்குச் செல்லாமல், எனது நிலத்திலே விவசாயம் செய்யலாமென, 30 வருடங்களுக்கு முன்பு வேர்க் கடலை சாகுபடியை தொடங்கினேன். இந்தத் தோட்டம் மொத்தம் 20 ஏக்கர். இதில்தான், 30 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதி வறண்ட நிலம் என்பதால் எல்லா வகையான பயிர்களும் இங்கு பயிரிட முடியாது. இந்த நிலத்தில் எந்தப் பயிரை சாகுபடி செய்ய முடியுமோ அதை மட்டும்தான் பயிரிடுகிறேன். அதேபோல தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலம் என்பதால் குறைந்த நீர், குறைந்த பராமரிப்பு கொண்ட பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்காக கால்நடைகளுக்குத் தேவையான தீவனப்பயிர்களை பயிரிடலாமென முடிவெடுத்தேன்.
தீவனப்பயிர்களை சாகுபடி செய்து பயிராகவும் விதையாகவும் விற்பனை செய்யலாமென நினைத்து, எனது நிலத்தில் 25க்கும் அதிகமாக தீவனப்பயிர்களை பயிரிட்டு வருகிறேன். இந்த தீவனப் பயிர்களில் இருந்து கிடைக்கும் விதைகளை, ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனை செய்து வருகிறேன். இந்த வகையில் தீவனப்புல்லில் இருந்து மட்டும் வருடத்திற்கு 3 லட்சம் வரை வருமானம் பார்க்கிறேன். அரசு பண்ணைகள் மற்றும் விவசாயிகளுக்கு நேரடியாக விதைகளை விற்பனை செய்தும் வருகிறேன்.இதுபோக, கடந்த மூன்று வருடங்களாக சோற்றுக் கற்றாழை சாகுபடி செய்து வருகிறேன். கிராமங்களில் சாதாரணமாக விளைந்து கிடக்கும் கற்றாழையை முறைப்படி சாகுபடி செய்து விற்பனை செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாமென கற்றாழை சாகுபடியை செய்து வருகிறேன். மொத்தமாக 4 ஏக்கரிலும், 10 ஏக்கரைச் சுற்றி வேலி ஓரங்களிலும் கற்றாழையைப் பயிரிட்டிருக்கிறேன். இதற்கு பராமரிப்பு செலவு என எதுவும் கிடையாது. விதைக்கற்றாழையைக் கூட நான் எங்கும் வாங்கவில்லை. எங்கள் கிராமத்தில் இயற்கையாக கிடைத்த கற்றாழைகளையே பிடுங்கி எனது தோட்டத்தில் விதைத்துவிட்டேன்.
ஒரு ஏக்கருக்கு கற்றாழையை சாகுபடி செய்ய சராசரியாக 2000 விதைக் கற்றாழைகள் தேவைப்படும். அப்படி விதைக்கிற கற்றாழைகளை முதல் பத்து மாதங்கள் வளர்ந்த பின், ஒரு செடிக்கு ஒரு கீற்று அதாவது ஒரு கற்றாழைச் செடிக்கும் ஒரு கற்றாழை இலை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். அதற்கடுத்து, மாதத்திற்கு ஒரு முறை மட்டும் ஒரு கற்றாழை கீற்று அறுவடை செய்ய வேண்டும்.ஒரு கற்றாழை கீற்று சராசரியாக 400 கிராம் முதல் 600 கிராம் வரை இருக்கும். சராசரியாக 500 கிராம் என வைத்துக் கொண்டால் கூட, ஒரு ஏக்கரில் உள்ள 2000 கற்றாழைச் செடிகளில் இருந்து ஒரு டன் கற்றாழைகளை நாம் அறுவடை செய்யலாம். 4 ஏக்கர் கற்றாழை சாகுபடியில் மாதத்திற்கு 4 டன் வரை மகசூல் கிடைக்கிறது.இந்தக் கற்றாழையை சராசரியாக ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யலாம். அதிகமான கற்றாழைக் கீற்றுகளை அறுவடை செய்தால் விலை குறைவாகவே கிடைக்கும். அதேசமயம் குறைந்த அளவில் அறுவடை செய்தால் விலை அதிகமாக கிடைக்கும். டிமாண்ட் முக்கியம். இதனால் நான் குறைவாகவே அறுவடை செய்து விற்பனை செய்கிறேன். மாதம் 4 டன் கற்றாழையை ஒரு கிலோ ரூ.30க்கு சராசரியாக விற்பனை செய்வதன் மூலம் எனக்கு வருமானமாக ஒரு லட்சத்தி இருபதாயிரம் கிடைக்கிறது. என்னிடம் இருந்து வாங்கிச் செல்லப்படும் கற்றாழைகள் சென்னை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற ஊர்களுக்கு ஜூஸ் தயாரிப்பிற்குச் செல்கிறது. அதுபோக, மீதமுள்ள கற்றாழைகளை நானே மதிப்புக்கூட்டி சோப்பு, ஆயில், பாடி வாஷ் தயாரித்து விற்பனை செய்கிறேன்’’ என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.
தொடர்புக்கு:
செல்லமுத்து: 99940 55060
இந்த இயற்கை வேளாண் பண்ணையில் விவசாயம் நடைபெறுவது ஒரு பக்கமென்றால் விவசாயம் சார்ந்த பயிற்சிகளும் இன்னொரு பக்கம் நடைபெறுகிறது. வெட்டிவேர் சாகுபடி, மைக்ரோ கிரீன்ஸ் வளர்ப்பு, கலர்மீன் வளர்ப்பு போன்ற பயிற்சி வகுப்புகளை மாதம் 2 முறை தனது பண்ணையிலையே நடத்தி வருகிறார் செல்லமுத்து. இந்த பயிற்சி வகுப்புகளில் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள், விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொள்கிறார்கள்.
கிராமங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களை இந்தப் பண்ணையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செல்லமுத்து கூறுகையில், `` எனது பண்ணை ஒரு வேளாண் சுற்றுலாத் தளமாகவும், கிராம அருங்காட்சியகமாகவும் இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால், கிராமங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களை வாங்கி எனது பண்ணையில் வைத்திருக்கிறேன்’’ என்றார்.
கற்றாழையில் நாட்டுக்கற்றாழை, கன்னிக்கற்றாழை, ராஜஸ்தான் கற்றாழை, கொல்லிமலை கற்றாழை போன்ற ரகங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த நான்கு கற்றாழையில் நாட்டுக்கற்றாழையை மட்டும்தான் செல்லமுத்து சாகுபடி செய்கிறார். இதில் மற்றவற்றை விட மருத்துவ குணம் அதிகம் என்பதால் சாகுபடியைத் தொடர்ந்து செய்கிறார்.
கற்றாழையைப் பொருத்தவரை பராமரிப்போ ஆடு, மாடு தொந்தரவோ இருக்காது. சொட்டுநீர் பாசனம் மூலம் குறைவான அளவில் தண்ணீர் பாய்ச்சினால், கற்றாழை கீற்றில் உள்ள சதைப் பகுதி அதிகமாக வளரும். இதனால் எடையும் கூடும்.