மதுராந்தகத்தில் தொடர் மழையால் அதிமுகவினர் வைத்திருந்த விளம்பர பேனர்கள் சரிந்து நடு ரோட்டில் விழுந்ததால் பரபரப்பு
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் நேற்றிரவு பெய்த தொடர் மழையால், அதிமுகவினர் வைத்திருந்த அனைத்து விளம்பர பேனர்களும் சாலையில் விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எழுச்சி பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், மகளிர் சுய உதவி குழுக்கள், குரு சிறு தொழில் முனைவோர், மருத்துவர்கள், பட்டதாரிகள் என பல தரப்பினரையும் நேரில் சந்தித்து வருகிறார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய தொகுதிகளில் நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி பயணம் மேற்கொண்டார். இதில் மதுராந்தகம் தொகுதிக்கான பிரசார பயண பொதுக்கூட்டம் மதுராந்தகம் நகரில் நடந்தது. இதையொட்டி எஸ்.டி.உக்கம் சந்த் சாலை, தேரடி வீதி, ஹாஸ்பிடல் சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் மதுராந்தகம் ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கருங்குழி பேரூர், மதுராந்தகம் நகரம் ஆகிய பகுதி அதிமுக ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் விளம்பர பதாகைகளை அமைத்தனர்.
இந்த பதாகைகள் அனைத்தும், மதுராந்தகம் பஜார் பகுதியில் உள்ள கடைகளை மறைத்திருந்தது. இது வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது. இதனால் கடும் எரிச்சலடைந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி, தேரடி ஜங்ஷன் பகுதியில் பிரசார பேருந்தில் நின்றபடியே பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில், இரவு 11 மணியளவில் மதுராந்தகம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. இதனால் முறையாக அமைக்கப்படாத பேனர்கள் சாலையின் மைய பகுதியிலேயே விழுந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இன்று காலை வரை பேனர்களை அதிமுகவினர் அகற்றவில்லை. இதனால் அதிகாலையில் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்ல முடியாமல் நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பேனர்கள் மீது பேருந்துகள் ஏறி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து சமூக வலைதளங்களில், பேனர் விழுந்து பொதுமக்கள் அவதிப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அதிமுகவினர் ஆமை வேகத்தில் வந்து பேனரை அகற்றினர். மேலும் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக அமைக்கப்பட்ட பேனர்களையும் அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.