தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல்: கடந்தாண்டை விட 21% அதிகரிப்பு
நீலகிரி: தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 14 வனக்கோட்டங்களில் 177 வரையாடு வாழ்விடப்பகுதிகளில் கடந்த ஏப்ரல் 24 முதல் 27 வரை 4 நாட்கள் 8000 பேர் பங்களிப்புடன் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. நீலகிரி வரையாடு குட்டிகள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பிறக்கின்றன. தாய், குட்டிகள் இரண்டையும் காணும் வகையில் கணக்கெடுப்பு ஏப்ரலில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நீலகிரி வரையாடு 2-வது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரையாடுகள் கணக்கெடுப்பு அறிக்கையை சென்னையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டார். அதில், 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் வரையாடுகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 21% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரையாடுகள்:
சங்க இலக்கியங்களில் வரையாட்டினை ‘வருடை’ என்று குறிப்பிடுகிறார்கள். சீவகசிந்தாமணியில் ‘ஓங்கு மால்வரை வரையாடு’ என்று குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள், உயர்ந்த மலைகளிலே உலவுகிற வரையாடு என்பதாகும். சங்க காலம் தொட்டே தமிழரின் வாழ்வியலோடு பயணித்த ஒரு விலங்கினம். ‘வரை’ என்ற தமிழ்ச்சொல்லிற்கு மலை என்று பொருள். இது ஆட்டினத்தைச் சேர்ந்தது என்பதால், மலைகளில் வாழ்கின்ற ஆடு அல்லது வரையாடு என்று பெயர் வந்தது. தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும்கூட இதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. படமாக மட்டும்தான் பார்த்திருப்போம். அழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன இந்த வரையாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.