நினைவாற்றல், கற்றல் திறனை மேம்படுத்துங்கள்!
நம் கல்வி முறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாணவருக்கும் மிக மிக அவசியமானது கற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் திறனும்தான். காரணம் நமது தேர்வு முறை மனப்பாடம் செய்து எழுதும் விதமாக இருப்பதால், படித்தவை அனைத்தும் நினைவில் இருந்தால் மட்டுமே, நாம் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். நம் மாணவர்களில் ஒரு சிலருக்கு இயல்பாகவே நினைவாற்றல் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு பாடங்களைப் படித்து நினைவில் வைத்துக்கொள்வதிலும், தேர்வை எதிர்கொள்வதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கற்றலிலும் பின்தங்கி நினைவாற்றலும் குறைவாக உள்ள மாணவர்கள் சில பயிற்சிகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நினைவுத்திறனை அதிகரிக்க தியானம் மற்றும் யோகா பயிற்சிகளை செய்யலாம். அதேபோல் படித்த பாடத்தை பல முறை திரும்பத் திரும்ப படித்தாலே, அது மனதில் ஆழமாக பதிந்து நினைவில் நிற்கும். மேலும், படித்ததை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். ஒரு பாடத்தை வெறுமனே மொட்டையாக மனப்பாடம் செய்யாமல், அதை முடிந்தளவிற்கு புரிந்து படிப்பதோடு வேறு சில சம்பவங்களோடு, நிகழ்வுகளோடு சம்பந்தப்படுத்தி மனப்பாடம் செய்தால் நிச்சயம் எளிதில் மறக்காது.
பொதுவாக வாசிப்பது மற்றும் எழுதும் பயிற்சிகள் மூளையின் மொழி மையங்களைத் தூண்டுகின்றன. புரிந்துகொள்ளுதல் மற்றும் பகுப்பாய்வுத் திறன்களை இவை மேம்படுத்துகின்றன. பல்வேறு பாடங்களை பல முறை படிப்பதன் மூலமோ அல்லது ஆக்கப்பூர்வமான எழுத்துப் பயிற்சி செய்வதன் மூலமோ மாணவர்கள் தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ளலாம்.
வழக்கமான நமது கற்றல் வழிமுறைகளில் சில புதுமையான யுத்திகளை அறிமுகப்படுத்துவது மூளையின் பல்வேறு பகுதிகளைச் செயல்படத் தூண்டும். புதிய செயல்பாடுகளை முயல்வது அல்லது வெவ்வேறு கோணங்களில் பணிகளை அணுகுவது படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்துவதோடு ஒட்டுமொத்த மூளைத்திறனை அதிகரிக்கும். இந்த மூளைப் பயிற்சிகளை தினசரி நடைமுறைகளில் சேர்ப்பதன் மூலம் நினைவாற்றல், அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தலாம். இதனால் சுமாராகப் படிக்கும் மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி செயல்திறனையும் மேம்படுத்தலாம். மேலும் சரியான ஊட்டச்சத்து, வழக்கமான தூக்கம் மற்றும் கொஞ்சம் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் நினைவாற்றலும் வளமாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் மனதின் முழுத் திறனையும் பயன்படுத்தி நினைவுத்திறனை அதிகரிக்கவும், கல்வியில் வெற்றி அடையவும் முடியும். எனவே, மாணவச் செல்வங்களே நீங்கள் நினைவாற்றலையும், கற்றல் திறனையும் மேம்படுத்துவதற்கான பயிற்சிகளைப் பின்பற்றி வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்!