மகளிருக்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமின்றி இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தும் அரசு: வேலூரில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
வேலூர்: இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை தமிழகத்தில் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது என்று வேலூரில் நடந்த விழாவில் 49 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.414.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.17.91 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.11.80 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார்.
49,021 பயனாளிகளுக்கு ரூ.414.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது: இந்தியாவுக்கே முன்மாதிரியான பல திட்டங்கள் தமிழகத்தில் திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல முதல்வர்கள், குறிப்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி ஆகியோர் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களை பாராட்டி, அத்திட்டங்களை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த போவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியுள்ளோம். இவ்வாறு திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமின்றி, அனைத்துத்துறைகளிலும் பொதுமக்களுக்கு திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர், வேலூர் நாராயணி மருத்துவமனையில் ரூ.5.50கோடி மதிப்பிலான புதிய சி.டி.ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார். இதையடுத்து வேலூர் நாராயணி பீடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 500 நாட்டுப்புற கலைஞர்களை கவுரவித்தார். பின்னர் நாராயணி மஹாலில் நடந்த அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
* செல்பி எடுத்து மக்கள் மகிழ்ச்சி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து நேற்று காலை வேலூர் புதிய பாலாற்று பாலம் வழியாக சென்று நேஷனல் சர்க்கிள் வரை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என்று ஆர்வத்துடன் வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பழைய பைபாஸ் சாலையில் சென்றபோது, துணை முதல்வரே அருகில் சென்று தூய்மை பணியாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.