தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறிவுக்கு முக்கியத்துவம் தருவதால்தான் தி.மு.கழகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிறது: தி.மு.க. 75 அறிவுத் திருவிழா நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை!

சென்னை: சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வந்த கழக இளைஞர் அணியின் தி.மு.க. 75 அறிவுத் திருவிழா நிறைவு விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முற்போக்கு புத்தகக் காட்சியில் பங்கேற்ற பதிப்பாளர்களுக்கும், அறிவுத் திருவிழாவின் வெற்றிக்கு தங்கள் உழைப்பைச் செலுத்திய அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி, நிறைவுரையாற்றினார். அப்போது அவர், றிவுக்கு முக்கியத்துவம் தருவதால்தான், இன்றைக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டி இயக்கமாக நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த உரிமையில்தான் நாம் அறிவுத் திருவிழாவை நடத்துகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

Advertisement

தி.மு.க. 75 அறிவுத் திருவிழா நிறைவு விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

தி.மு.க-75 என்ற அறிவுத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி. 7 நாட்கள் இந்தப் புத்தக்காட்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள் அரங்கத்திற்குள் நடந்த நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 10 அமர்வு, 44 சிறந்த பேச்சாளர்கள், அதன்பிறகு இங்கு ஒரு வாரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எனக்கு தெரிந்து இந்த மாதிரி சிறப்பான நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது கிடையாது.

தி.மு.க. இளைஞர் அணி

நம் கழகத் தலைவர், முதலமைச்சர் இந்த அறிவுத் திருவிழாவுக்கு அனுமதி அளித்து, இளைஞர் அணிக்கு வாய்ப்பு கொடுத்து துவக்கி வைத்தார்கள். வருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்பிறகு கருத்தரங்கம், காலத்தின் நிறம் கருப்பு-சிவப்பு என்ற புத்தக வெளியீடு என்று இப்படி இந்த விழா நடந்திருந்தாலும், முற்போக்கு புத்தகக்காட்சி இல்லாமல் இந்த அறிவுத் திருவிழா முழுமை அடைந்திருக்காது. அரசியல் புத்தகங்கள் மட்டுமே கொண்ட புத்தகக்காட்சியை இவ்வளவு சிறப்பாக யாராலும் நடத்தி இருக்க முடியாது. மு.க. இளைஞர் அணியால் மட்டுமே இது சாத்தியம். பொதுவாக, புத்தகக்காட்சிக்குச் சென்று பார்பேன், அதில் சமையல் குறிப்புக்கு என்று ஒரு அரங்கு வைத்திருப்பார்கள், ஜோதிட புத்தகங்கள், செல்ப் டெவலப்மென்ட், கோலம் போடுவது எப்படி இப்படிதான் நிறைய புத்தகங்கள் இருக்கும். ஆனால், நம் இளைஞர்அணி நடத்துகிற இந்த புத்தகக்காட்சியில் முழுவதும், அரசியல் புத்தங்களை மக்கள் வாங்கி படிக்கின்ற நிலைமையை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த 9 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் புத்தகக்காட்சியைப் பார்வையிட்டுள்ளார்கள். 35 லட்சம் ரூபாய்கு மேல் புத்தகங்கள் இங்கு விற்பனையாகி உள்ளது. அதில் இன்னொரு சிறப்பு, அதிகமாக விற்ற புத்தகம் காலத்தின் நிறம் கருப்பு-சிவப்பு. இந்தப் புத்தகம் மட்டும் 1,500 விற்பனையாகியுள்ளது. முன்பதிவு திட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் பிரதிகள், காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு புத்தகம் விற்பனையாகியுள்ளது. அடுத்த ஆண்டு இதைவிட, அதிகமாக விற்பனையாகும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. கருத்தரங்கத்தில் நான் பேசும்போது சொன்னேன். இந்த அறிவுத் திருவிழாவை நடத்துவதற்கு, வள்ளுவர் கோட்டத்தைத் தேர்ந்தெடுத்தமைக்கு நிறைய காரணங்கள் உண்டு என்று.

கலைஞர் 1973-ஆம் இந்த வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள், அப்போது அவர் முதலமைச்சர். அதன்பிறகு ஆட்சி களைக்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்ட திறப்பு விழாவுக்கு கலைஞருக்கே அழைப்பு கொடுக்கப்படவில்லை. கலைஞரை நிராகரித்துவிட்டு, வள்ளுவர் கோட்டத்தை திறந்தார்கள். அதற்பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு 1989-ஆம் ஆண்டு முதலமைச்சரானார். முதலமைச்சரானவுடன் அவர் பதவி ஏற்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் இந்த வள்ளுவர் கோட்டம்.

வள்ளுவர் கோட்டம்

வள்ளுவர் கோட்டம் என்றால், நிறைய பேர் பயந்து, இராசி இல்லாத இடம் என்று சொல்வார்கள். நான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு அதுவும் முக்கியமான காரணம். ஏனென்றால், அறிவுத் திருவிழா நடத்துவதற்கும், இராசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நம்புகிறவன் நான். இப்படித்தான் சென்ற சட்டமன்ற தேர்தலின்போது, நிறையபேர் ஜோசியம் எல்லம் பார்த்தார்கள். கட்டம் சரியில்லை, ஜாதகம் சொல்கிறது. முதலமைச்சராக வாய்ப்பே கிடையாது என்று சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் ஒருமனதாக நம் தலைவர் அவர்களை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு வலுசேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டோம்.

இந்தப் புத்தகக் காட்சியில் 58 கடைகள் அமைக்கப்பட்டு, 46 பதிப்பகங்கள் பங்கு பெற்றன. அதில் ஒரு சிறப்பு என்னவென்றால், புத்தகக் காட்சியில் நுழையும்போதே முதல் கடையாக இளைஞர் அணியின் ”முத்தமிழ் அறிஞர்’ பதிப்பகத்தின் கடை. அனைத்து கடைகளையும் பார்த்துவிட்டு, நீங்கள் வெளியே வரவேண்டும் என்றால், கடைசி கடையாக இருந்தது கலைஞர் கருவூலம் கடை. இதற்கிடையில் இருந்த கடைகளில் திராவிட இயக்க, கம்யூனிச, அம்பேத்கரிய நூல்கள், பெண் விடுதலை பேசுகிற நூல்கள், திராவிட சினிமா நூல்கள் என்று பல முற்போக்கு நூல்கள் இடம்பெற்றிருந்தன.

திருநங்கை பதிப்பகத்துக்கும் கடை ஒதுக்கப்பட்டு அந்தத் தோழர்களின் புத்தகங்களும் பெரியளவில் விற்பனையாகியுள்ளன. அதேபோல, அறிவுத்திருவிழாவில் பேசப்பட்ட உரைகள், கலை நிகழ்ச்சிகள் எல்லாமே சமூக வலைதளத்தில் அனைவராலும் கவனிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக சிவகங்கை மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்தேன். அங்கு பல்வேறு கழக உடன்பிறப்புகள் – திராவிட இயக்கப் பற்றாளர்கள் என்று பலரை சந்தித்தேன். இந்த அறிவுத் திருவிழாவை இளைஞர் அணி மிகச் சிறப்பாக நடத்தியுள்ளீர்கள், அதற்கு எங்கள் பாராட்டுகள் என்று சொன்னார்கள். நான்கு வருடங்களுக்கு முன்பாகவே இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். அந்த உண்மையை நானும் நிச்சயம் உணர்கிறேன்.

முற்போக்குத் திருவிழா

இனிமேல், நம் தலைவர் சொன்னதைப்போல் வருந்தோறும் வேறு மாவட்டங்களில் இந்த அறிவுத் திருவிழாவை நிச்சயம் நம் இளைஞர் அணி, இன்னும் சிறப்பாக நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபடும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இந்த அறிவுத்திருவிழாவை எந்த நோக்கத்துக்காக நடத்தினோமோ அந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது என்ற நம்பிக்கையை இங்கு வந்துள்ள வாசகர்கள், இளைஞர் அணி தம்பிமார்கள் எனக்குக் கொடுத்துள்ளீர்கள்.

நாம் சரியான இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற மனநிறைவை நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்துள்ளீர்கள். ஏன், இந்த முற்போக்குத் திருவிழாவை நடத்தினோம் என்றால், புத்தகங்களின் வழியே தமிழ்நாட்டு இளைஞர்களை, அரசியல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கழக இளைஞர் அணி தோழர்கள் நிறைய படிக்க வேண்டும், நிறைய கருத்துகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மை விமர்சிப்பவர்களின் கருத்துகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பதில் சொல்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அந்த பதிலைத் தேடி நாம் செல்ல வேண்டும். அதற்கு நாம் படிக்க வேண்டும். விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் போது, நம்மால் அரசியல் களத்தில் உறுதியாக நிற்க முடியும்.

இளைஞர்களின் அறிவைப் பெருக்க வேண்டும், ஆற்றலை வளர்க்க வேண்டும் என்று நாம் இவ்வளவு வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாட்டில் சில பேரைப் பார்த்தீர்கள் என்றால், அவர்களின் தொண்டர்கள் அறிவாளிகளாக இருப்பதை, அவர்களின் தலைவர்களே விரும்புவதில்லை. தன் தொண்டர்களுக்கு அரசியல் அறிவும் – தெளிவும் வந்துவிட்டால், அவர்களால் இனி அரசியலே நடத்த முடியாது என்று தலைவர்கள் பயப்படுகிறார்கள். உதாரணத்துக்கு அ.தி.மு.க.வை எடுத்துக்கொள்ளுங்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்களுக்கு பெரியார், அண்ணா கொள்கைகள் தெரியாது, இன்னும் சொல்லப்போனால், அ.தி.மு.க எதற்கு தொடங்கப்பட்டது என்றுகூட தெரியாது. தி.மு.க-வை விமர்சிக்க வேண்டும், கலைஞரை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தொடங்கப்பட்ட கட்சிதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

இப்போதும் அந்தக் கட்சியின் கொள்கைகள் தெரியக்கூடாது என்று, அந்த கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்தப் பணியின் ஈடுபட்டுள்ளார். ஏனென்றால், அவர்களுக்கும் வரலாறும், கொள்கையும் தெரிந்துவிட்டது என்றால், மக்கள் இன்றைக்கு எடப்பாடியை பார்த்து கேட்கிற கேள்விகளை எல்லாம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் நாளை அவர்களின் தலைவரை பார்த்து கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அ.தி.மு.க-வின் நிலைமை.

பா.ஜ.க-வுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என்று அம்மையார் ஜெயலலிதா சொன்னாங்களே, இப்போது ஏன் கூட்டணி வைத்தீர்கள். ஏன்… நீங்களே, 4 மாததுக்கு முன், 2031-இல் கூட பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று சொன்னீர்களே. ஆனால், இப்போது மறுபடியும் நாம் பா.ஜ.க-வுக்கு அடிமையாக ஆகிவிட்டோமே ஏன்” என்று எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து அ.தி.மு.க. தொண்டர்கள் கேள்வி கேட்பார்கள். அதனால்தான் அ.தி.மு.க தொண்டர்களுக்கு கொள்கை எதுவும் தெரியக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கொள்கை தெரியாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எடப்பாடி பழனிசாமிக்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது. அவர் படித்த அந்த ஒரு புத்தகத்தை நானும் தேடுகிறேன், இதுவரை எங்கேயும் கிடைக்கவில்லை. அவர் படித்த ஒரே புத்தகம் சேக்கிழார் எழுதிய ராமாயணம் மட்டும்தான்.

கொள்கைகளை மட்டும் அவர் மறக்கவில்லை, அவரின் தலைவரையே பல நேரங்களில் மறந்துள்ளார். எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போட்டுட்டு, அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்தேன் என்று வெளியே வந்து பேட்டி கொடுக்கிறார். அப்படிப்பட்ட தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர். இதுதான் இன்றைக்கு அ.தி.மு.க-வின் நிலைமை.

இதுவே, நம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மிடம் 200 இளம் பேச்சாளர்களை நாம் தேர்வு செய்துள்ளோம். அந்த இளம் பேச்சாளர்களை விட்டால்கூட, ஒவ்வொருவரும் கொள்கை பற்றி மணிக் கணக்கில் போட்டி போட்டுக்கொண்டு பேசுவார்கள்.

அ.தி.மு.க. தான் அப்படியென்றால், இன்னும் சில கும்பல்கள் இருக்கின்றன. நாம் அறிவுத் திருவிழாவை நடத்தி, நான்கு நாட்களுக்குப் பின்தான் இப்படியொரு விழா நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எப்படி நீங்கள் அறிவுத் திருவிழா நடத்தலாம் என்று கேட்கிறார்கள்.

யாரை கேட்டு, எதற்காக நடத்துனீர்கள் என்று கேட்கிறார்கள். அறிவு இருப்பவன் அறிவுத் திருவிழா நடத்துகிறான். அறிவுத் திருவிழாவில் அவர்களை விமர்சித்துப் பேசிவிட்டோம் என்று கோபம் வேறு. எப்படி போலீஸை பார்த்தால், திருடர்களுக்குப் பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அதிர்ச்சி. சுகாதார மேம்பாட்டைப் பற்றி பேசும்போது, கிருமிகளை பற்றி பேசாமல் இருக்க முடியுமா? கிருமிகளிடம் இருந்து நாம் எப்படி விலகி நிற்க வேண்டும் என்பதைப் பற்றி பேசினால்தான், நாம் சுகாதார மேம்பாட்டைப் பற்றி பேச முடியும். அதைப்போல்தான், அறிவுத் திருவிழாவில் கொள்கைகளைப் பற்றி பேசும்போது, கொள்கையற்ற கும்பலின் ஆபத்தைப் பற்றியும் இங்கே பேசியவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கொள்கை வகுப்பறைகள்

திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே ஒரு அறிவு இயக்கம். கழகத்தில் பயணிக்கிற ஒவ்வொரு நாளும் அறிவுத் திருநாள்தான். குக்கிராமங்களில் கூட படிப்பகம் நடத்திய இயக்கம், நம் திராவிட முன்னேற்றக் கழகம். சலூன் கடை, டீ கடை, சைக்கிள் ஸ்டாண்ட் என்று சாமானிய மக்களையும் அரசியல் பேச வைத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். நம் ஒவ்வொரு தலைவரும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளைத் தலைமையேற்று நடத்தினார்கள். கழக முன்னோடிகள் எல்லோரும் புத்தகங்கள் எழுதினார்கள். நம் கழக மேடைகள் ஒவ்வொன்றும், கொள்கை வகுப்பறைகள் என்று சொன்னால் அது மிகையாகாது. கழகத்தின் முதல் தலைமை அலுவலகத்துக்கு அண்ணா வைத்த பெயர் அறிவகம்.

அதன் பிறகு நம் கலைஞர் நம் கட்சியின் தலைமையகத்தைக் கட்டி, அதற்கு அவர் வைத்த பெயர் அண்ணா அறிவாலயம். இப்படி, அறிவுக்கு முக்கியத்துவம் தருவதால்தான், இன்றைக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டி இயக்கமாக நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த உரிமையில்தான் நாம் அறிவுத் திருவிழாவை நடத்துகிறோம். வெறுப்படைந்த அனைவருக்கும் சவால் விடுகிறோம். நீங்களும் நடத்திக் காட்டுங்கள் பார்ப்போம். ஆகவே, அடிமைகளையும், பாசிஸ்ட்டுகளையும், கொள்கையற்ற வெற்று அட்டைகளையும் கண்டு நாம் அச்சப்பட தேவையில்லை. இந்த அறிவுத் திருவிழா, கழக வரலாற்றில் என்றைக்கும் நிச்சயம் நீடித்து, நிலைக்கும்.

இன்றைக்கு அறிவுத் திருவிழா நிறைவுபெற்று, நாம் எல்லாம் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்படுகிறோம். இளைஞர் அணி அமைப்பாளர்கள், சகோதரர்களை எல்லாம் பார்க்கும்போது, ஏதோ காலேஜ் பேர்வெல் டே முடித்துவிட்டு, நண்பர்களை விட்டு கிளம்புகிற மாதிரி உங்கள் முகத்தில் ஒரு சோகம் தெரிகிறது.

கலைஞரின் பேரன் நான்

நாம் இங்கிருந்து புறப்பட்டு நேராக வீட்டுக்குப் போகப் போவதில்லை. அடுத்து நமக்கு மிகப்பெரிய களம் காத்துக்கொண்டு இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலைப் பார்க்க போகிறோம். இந்த அறிவுத் திருவிழாவில் நாம் பேசிய விஷயங்கள், பரிமாறிக் கொண்ட கருத்துகளை எல்லாம் பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் இந்த அறிவுத் திருவிழா நடத்தப்பட்டது. தெருமுனைக் கூட்டங்கள், சின்ன சின்ன வீடியோஸ், ரீல்ஸ், சமூக வலைதளம் என்றும் இந்தக் கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், நாடு இன்றைக்கு மிக மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. இவ்வளவு நாட்களாக எதிர்க்கட்சிகளை மிரட்ட, ஈ.டி, ஐ.டி, சி.பி.எஸ் போன்ற அமைப்புகளை வைத்து பயம்புறுத்தினார்கள். சில நாட்களுக்கு முன்பு என்னையும் ஈ.டி-ஐ வைத்து பயமுறுத்தினார்கள். இதற்கெல்லாம் பயப்படுகிற ஆளா நான்? முத்தமிழறிஞர் கலைஞரின் பேரன், கழகத்தலைவர் அவர்களின் வளர்ப்பு நான்.

எதிர்கட்சிகளை முடக்க, தேர்தல் ஆணையமே அந்த வேலையில் இறங்கியுள்ளது. எஸ்.ஐ.ஆர். என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். தேர்தலையை திருட்டுத்தனமாக நடத்த இன்றைக்கு ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. நாம் அனைவரும் விழப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.

முதலில் உங்கள் ஒவ்வொருவர் வாக்கையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும். உங்களைச் சுற்றி இருக்கிற தகுதியான ஒரு வாக்களர்கூட, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடக் கூடாது. இதில் நாம் கண்ணும், கருத்துமாக நாம் ஈடுபட வேண்டும். அதேமாதிரி, போலி வாக்காளர்கள் சேர்ப்பதையும் நாம் எந்த காலத்திலும் அனுமதிக்கக் கூடாது. நம் தலைவர் அவர்கள் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்று காட்ட வேண்டும் என்று அடுத்த 4 மாதங்கள் களத்தில் பணியாற்ற வேண்டும்.

1967-ஆம ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கழகம் முதன்முறையான ஆட்சியைப் பிடிப்பதற்கு, அப்போது இருந்த உடன்பிறப்புகள், எப்படி வேலை பார்த்தார்களோ, அதைவிட அதிகமாக நாம் வேலை பார்க்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த 4 மாதத்துக்கு வேறு எந்த பணியும் நம் கண்களுக்குத் தெரியக்கூடாது. 2026-இல் நாம் வெற்றி பெற்றால், அது கழகத்தின் வெற்றி மட்டும் கிடையாது, அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி என்பதை மக்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும்.

கழகத் தலைவருக்கு நன்றி

7-வது முறையாக கழக ஆட்சி அமைக்க, தொடர்ந்து 2-வது முறையாக, நம் தலைவர் அவர்கள், முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்றால், இளைஞர் அணி தம்பிமார்கள் நாம் களத்தில் இறங்கி செய்துகாட்ட வேண்டும். அதற்கு இந்த அறிவுத் திருவிழாவும், முற்போக்கு புத்தகக் காட்சியும் நிச்சயம் அடித்தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நேரத்தில், அறிவுத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கி, வழிகாட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், தலைமைக் கழகத்துக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகக் காட்சியில் பங்கேற்ற அத்தனை பதிப்பகங்களுக்கும், இரவு பகலாக உழைத்த அதன் பணியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகக்காட்சியில் உரைவீச்சை வழங்கிய திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி, நாகை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ஆளுர் ஷா நவாஸ், திரைப்பட பாடலாசிரியர் சகோதரர் கவிஞர் யுகபாரதி, இயக்குநர் சகோதரர் கரு.பழனியப்பன், எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் சுகிர்தராணி, பகுத்தறிவு மேஜிக் நிகழ்ச்சியை நடத்திய தாமோதரன் உள்ளிட்டோருக்கும், புதுகை பூபாளம், கோவன் கலைக்குழு, பாப்பம்பட்டி ஜமா, மாற்று ஊடக மையம் கலைக்குழு, நிகர் கலைக்கூடம் உள்ளிட்டவற்றின் கலைஞர்களுக்கும், அனைவரின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்க துணை நின்ற மாவட்டக் கழகச் செயலாளர் சிற்றரசு அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் அணியின் சென்னை மண்டல பொறுப்பாளர், மாநில துணைச் செயலாளர் சகோதரர் எஸ்.ஜோயல் அவர்களுக்கும், அவருடன் துணை நின்ற அத்தனை மாநில துணைச் செயலாளர்களுக்கும், சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சகோதரர் பிரகாஷ் உட்பட அத்தனை மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அன்பகம் பணியாளர்கள், பாதுகாப்பு வழங்கிய காவல்துறை நண்பர்கள், வள்ளுவர் கோட்டம் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், என அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவுத்திருவிழாவில் உங்களைப் போல் நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

வாய்ப்புக்கு நன்றி. வணக்கம். இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக தி.மு.கழகத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை உரையாடல் வடிவில் பறை இசையுடன் விவரித்த `மாற்று ஊடக மையம்' கலைக்குழுவின் நிகழ்ச்சி பெரும் எழுச்சியாக நடைபெற்றது. மேலும், பிற்போக்குத்தனங்களை பின்னுக்குத் தள்ளி, அவற்றுக்கு மாற்றாக அறிவை, திருவிழாவாக கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வழக்கறிஞர் அருள்மொழி எடுத்துக் கூறி உரையாற்றினார்.

பங்கேற்றவர்கள்

மாநில திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி, சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் சிற்றரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவர் கனிமொழி என்.வி.என்.சோமு. சல்மா, மருத்துவர் கலாநிதி வீராசாமி, கே.இ.பிரகாஷ், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ரகு, தாட்கோவின் தலைவர் இளையராஜா, அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன், சீனிவாசன், ஜி.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, மருத்துவர் எழிலன், தமிழரசி, முத்துராஜா, ஈஸ்வரப்பன், எபினேசர், பிரபாகர்ராஜா, கழக அணிகளின் மாநிலச் செயலாளர்கள் எஸ்.கே.பி.கருணா, அக்ரி கணேசன், பேராசிரியர் தீபக், மருத்துவர் சுபேர் கான், கழக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர், கோவி லெனின், பத்திரிக்கையாளர்கள் ஜென் ராம், ஜீவசகாப்தன், தர்மசெல்வன், பகுதி கழகச் செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, வினோத் வேலாயுதம், புழல் நாராயணன், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ் எர்னஸ் பெரியார், கழகத்தின் பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள் ஆண்டாள் பிரியதர்ஷினி, பத்மபிரியா, சூர்யா கிருஷ்ணமூர்த்தி, ஹபிசுல்லா, இறையன்பன் குத்தூசு, நுங்கை வி.எஸ்.ராஜ், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் வழக்கறிஞர் பிரகாஷ், ராஜா அன்பழகன், ஆர்.டி.மதன்குமார், வானவில் விஜய், லோகேஷ், கிரண், சுரேஷ்குமார், கோல்டு பிரகாஷ், யுவராஜ், அரசு ஆர்ட்ஸ் கோபி, போஸ் பழனியப்பன், முத்து, ராஜா, கார்த்திக், ஆனந்த், கழக வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளர் வி.பி.மணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கவிஞர் மனுஷ்யபுத்திரன், திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க நிர்வாகி பேராசிரியர் தேன்மொழி, ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் உள்பட கழக முன்னணியினர் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News