வரி குறைப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு; புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாளை மறுநாள் அமல்
* இருப்பு பொருளில் திருத்தப்பட்ட புதிய விலையை ஒட்ட வேண்டும்
* ஒன்றிய நிதியமைச்சகம் தலைமையில் அமைச்சகங்கள் கண்காணிப்பு
புதுடெல்லி: வரும் திங்கள்கிழமை முதல் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வருவதால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் கார்கள் வரை பலவற்றின் விலை கணிசமாகக் குறைய உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் நோக்கில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்கு வரி விதிப்பு முறைகள் நடைமுறையில் இருந்து வந்தன. இந்நிலையில், வரி அமைப்பை எளிமைப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியைக் குறைக்கவும், கடந்த 3ம் தேதி நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிய வரி விதிப்பு முறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த புதிய சீர்திருத்தங்கள், ‘ஜிஎஸ்டி 2.0’ என்ற பெயரில் வரும் 22ம் தேதி (நாளை மறுநாள்) முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய வரி விதிப்பு முறையின்படி, தற்போதுள்ள நான்கு அடுக்கு முறை மாற்றப்பட்டு, இரண்டடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்படி, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5% வரியும், இதர பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18% வரியும் விதிக்கப்படும். அதேசமயம், சொகுசுப் பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்காக 40% என்ற புதிய வரி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, விலை உயர்ந்த சொகுசு கார்கள், உல்லாசப் படகுகள், தனியார் விமானங்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் பெரும்பாலான குளிர்பானங்கள் மீது 40% வரி விதிக்கப்படும். இருப்பினும், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு, இழப்பீட்டு கூடுதல் வரி நிலுவைகள் முழுமையாக வசூலிக்கப்படும் வரை தற்காலிகமாக பழைய 28% வரியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி மாற்றத்தால், மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள பல்வேறு பொருட்களின் விலை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, 28% வரி வரம்பில் இருந்த குளிரூட்டிகள், 32 அங்குலத்திற்கும் மேலான தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற நுகர்வோர் மின்னணு சாதனங்கள் இனி 18% வரி வரம்புக்குள் வரும். இதேபோல், சிறிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கான வரி 28% மற்றும் கூடுதல் வரியிலிருந்து 18% ஆகக் குறைக்கப்படுகிறது. சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், மிதிவண்டிகள், சமையலறைப் பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இனிமேல் 5% வரி மட்டுமே விதிக்கப்படும். பென்சில்கள், அழிப்பான்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான எழுதுபொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தனிநபர் ஆயுள் காப்பீட்டு சந்தா தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதர மருத்துவ உபகரணங்களுக்கான வரி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, டிராக்டர்கள், தெளிப்பான்கள், அறுவடை இயந்திரங்கள் போன்ற விவசாய இயந்திரங்களுக்கான வரி 12 முதல் 18% என்ற நிலையில் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் செலவுகளைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி மாற்றங்களை முறைப்படி அமல்படுத்துவதற்கான அறிவிப்புகளை ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் விலை நிர்ணயம் மற்றும் விநியோக முறைகளை புதிய வரி விகிதங்களுக்கு ஏற்ப மாற்றி வருகின்றன. வரி குறைப்பின் முழுப் பயனையும் நுகர்வோருக்கு வழங்குவதாக பல நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் மூலம் நுகர்வோரின் கைகளில் கூடுதலாக சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் புழங்கும் என்றும், இது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வரி குறைப்பு பணவீக்கத்தை 1.1 சதவீதம் வரை குறைத்து, வாகனம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறையில் தேவையை அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வரவுள்ள நிலையில், அதன் முழுப் பலன்களும் பொதுமக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், ஒன்றிய நிதி அமைச்சகம், மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையின் மத்திய வாரியத்துடன் இணைந்து புதிய கண்காணிப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்களை அனைத்து அமைச்சகங்களும் கண்காணிக்க வேண்டும் எனவும், வரி குறைப்புக்கு ஏற்ப நிறுவனங்கள் விலையைக் குறைக்கத் தவறினால் உடனடியாக அடையாளம் காண வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்கள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு சுங்கத் துறை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னல் (ஜிஎஸ்டிஎன்) அமைப்பு, வரி செலுத்துதல் மற்றும் கணக்குத் தாக்கல் ஆகியவற்றை இணையம் வழியே கண்காணிக்கும். மேலும், தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்களை எளிதில் கண்டறிய முடியும். மின்னணு மற்றும் மின்னணு வழிப் பட்டியல் முறைகள் மூலம் பொருட்களின் பரிமாற்றம் மற்றும் இயக்கம் கண்காணிக்கப்படும். இதனிடையே, பழைய இருப்பில் உள்ள பொருட்களை விற்பனை செய்ய நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்தப் பொருட்களின் உறைகள் மீது, வரி குறைப்பால் திருத்தப்பட்ட புதிய விலையை அச்சிட்டோ அல்லது ஸ்டிக்கர் மூலமாகவோ தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என நுகர்வோர் நல அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. விலை மாற்றம், பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மென்பொருள் சார்ந்த சிக்கல்கள் குறித்து அனைத்து ஒன்றிய அமைச்சகங்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரிச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விரைந்து விசாரித்து தீர்வு காணும் வகையில், ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம், வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய இருப்பில் உள்ள பொருட்களை விற்பனை செய்ய நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தப் பொருட்களின் உறைகள் மீது, வரி குறைப்பால் திருத்தப்பட்ட புதிய விலையை அச்சிட்டோ அல்லது ஸ்டிக்கர் மூலமாகவோ தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என நுகர்வோர் நல அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.