ஐ லவ் முகமது விவகாரம் மதத்தலைவர் உள்பட 8 பேர் கைது: உபியில் மேலும் சில பகுதிகளில் பதற்றம்
பரேலி: உத்தரபிரதேசத்தில் ஐ லவ் முகமது பிரசாரத்தை ஆதரித்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மதத்தலைவர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சில பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ராவத்பூர் கிராமத்தில் கடந்த 4ம் தேதி மிலாது நபி கொண்டாடப்பட்டது. அப்போது இந்த கிராமம் முழுவதும் நான் முகமதுவை காதலிக்கிறேன் (ஐ லவ் முகமது) என்ற வாசகங்கள் அடங்கிய மின்பலகை வைக்கப்பட்டது. மேலும் மிலாது நபி ஊர்வலத்திலும் எடுத்து செல்லப்பட்டது.
இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே ஐ லவ் முகமது பலகைகள் அகற்றப்பட்டன. இதற்கிடையே, நேற்று முன்தினம் தொழுகைக்குப்பிறகு ஐ லவ் முகமது பிரசாரத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த மதத்தலைவரும், இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தவுகீர் ராசா கான் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு கடைசி கட்டத்தில் போலீசார் அனுமதி மறுத்ததால் வன்முறை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
உடனே காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இது, பரேலி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மதத்தலைவரும், இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தவுகீர் ராசா கான் உள்பட 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். போலீசார் இரவு முழுவதும் வீடு வீடாக சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரேலியை தொடர்ந்து பாராபங்கி மற்றும் மாவ் மாவட்டத்திலும் சில பகுதிகளில் இந்த விவகாரத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையே நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘மவுலானா ஒருவர் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டார். சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற உறுதியான செய்தியை மாநில அரசு அனுப்பி உள்ளது. நாங்கள் கற்றுக் கொடுத்த பாடம், எதிர்கால சந்ததியினர் கலவரம் செய்வதற்கு முன்பு இருமுறை சிந்திக்க வைக்கும்’’ என்றார்.
* உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
இந்திய முஸ்லிம் மாணவர் அமைப்பின் தேசியத் தலைவர் ஷுஜாத் அலி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘இஸ்லாமியர்கள் மீது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ‘ஐ லவ் முகமது’ விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மேலும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில காவல்துறையினர் மத வழிபாட்டை குற்றமாக்க கூடிய வகையில் வகுப்புவாத வழக்குகளை பதிவு செய்துள்ளது. எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.