சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகள் உள்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு
* குறைந்த விலைக்கு சொகுசு கார்களை வாங்கிய நடிகைகள் பலர் கலக்கம்
சென்னை: பூடானில் இருந்து சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக, கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிரித்விராஜ் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என கேரளா, தமிழ்நாடு உள்பட 17 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், கேரள மாநில சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் தனது நண்பர்கள் மூலம் குறைந்த விலைக்கு பூடான் நாட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் அனைத்தும் பூடான் நாட்டில் போலியான ஒருவர் பெயரில் வாங்கி, அதை பழைய கார்கள் இறக்குமதி செய்தது போல் புதிய சொகுசு கார்களை நடிகர் துல்கர் சல்மான் இறக்குமதி செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக, கடந்த மாதம் இறுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர் துல்கர் சல்மான் வீடுகள் மற்றும் நடிகர் பிரித்விராஜ், அமித் சக்லகல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நடிகர் துல்கர் சல்மான் வீடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த 29 சொகுசு கார்கள் உள்பட மொத்தம் 39 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கார்களின் விலை ஒவ்வொன்றும் ரூ.4 கோடி முதல் ரூ.10 கோடி வரை மதிப்புடையது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, பூடான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த புதிய சொகுசு கார்கள் மட்டும் இல்லாமல் பூடான் ராணுவம் பயன்படுத்திய ‘லேண்ட் ரோவர்’ உள்பட பழைய சொகுசு கார்களை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி, அதை இந்தியாவில் மறுபதிவு செய்து பல கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததும் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதை நடிகர் துல்கர் சல்மான் தனது நண்பர்கள் மூலம் ஒரு தொழிலாக செய்து வந்ததும் தெரியவந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு பல நூறு கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம் பூடான் நாட்டில் இருந்து காரில் தங்கம் கடத்தி வரப்பட்டதாகவும் இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி மோசடியில் அமலாக்கத்துறை ‘அந்நிய செலாவணி மேலாண்மை’ சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை நேற்று ஒரே நேரத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மானின் 2 வீடுகள், அவரது தந்தையும் கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பழைய வீடு மற்றும் புதிய வீடு, நடிகர் பிரித்விராஜ் வீடுகள், தொழிலதிபர் அமித் சக்லகல் உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடத்தினர்.
குறிப்பாக கேரள மாநிலத்தில், கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் சொகுசு கார்கள் வாங்கிய மற்றும் நடிகர் துல்கர் சல்மானின் நண்பர்களான வாகன டீலர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீடு மற்றும் அவரது தந்தை மம்மூட்டி வீடுகளில் கேரளாவில் இருந்து 4 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த ஆவணங்கள், பூடான் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய சொகுசு கார்கள் ஏலத்தில் எடுத்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்த ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், சொகுசு கார்கள் விற்பனை செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் பூடான் நாட்டில் இருந்து நடிகர் துல்கர் சல்மான், பிரபலமான தனது தந்தையின் பெயரை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ‘சினிமா பாணியில்’ 100க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து ஒன்றிய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கார்கள் அனைத்தும் கடல் மார்க்கமாக கப்பல் மூலம் சென்னை மற்றும் கொச்சின் துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கான ஆவணங்கள் சோதனையில் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் கேரளா மற்றும் தமிழகம் முழுவதும் மொத்தம் 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில்தான் எத்தனை கோடி அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் மோசடி நடந்துள்ளது என முழுமையாக தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை சம்பவம் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு சொகுசு கார்கள் வாங்கிய நடிகர் மற்றும் நடிகைகள் பலர் தற்போது கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.