சட்ட விரோதமாக பத்திர பதிவு செய்யப்பட்ட 97 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்க கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்டோரால் கிரயம் செய்யப்பட்ட 97 ஏக்கர் பஞ்சமி நிலத்தின் பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய கோரிய மனுவை பரிசீலித்து நான்கு வாரத்தில் முடிவெடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரும், நீல பூமி வள ஆதார ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் உள்ள ஏ.தமிழ்மாறன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், பட்டியல் இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் செம்பாக்கம் வருவாய் கிராமத்தில் 97 ஏக்கர் 78 சென்ட் நிலம் பஞ்சமி நிலமாக ஆங்கிலேய ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்டது. இவற்றில் 3 கிரய ஆவணங்கள் மூலம் 49 ஏக்கர் நிலத்தினை ரூ. 38.22 கோடிக்கு சென்னை அடையாறில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக கிரயம் செய்துள்ளது.
அந்த இடத்தில் வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல 97 ஏக்கர் நிலமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, பஞ்சமி நிலத்தை கிரயம் செய்தது, அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்றது உள்ளிட்ட பத்திரப்பதிவுகளை ரத்து செய்து மீண்டும் பஞ்சமி நிலமாக மாற்றி பட்டியல் இனத்தை சேர்ந்த பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை ஆகியோரிடன் மனு அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும், பஞ்சமி நிலங்கள் விற்பனை செய்யப்பட்டதை ரத்து செய்யவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஜி.மாயகிருஷ்ணன், அரசு தரப்பில் கே.கார்த்திக் ஜெகன்நாத் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனு மீது உரிய அதிகாரி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கருத்தை கேட்டு 4 வாரத்தில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.