சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக மருந்து நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி அமலாக்கத்துறை விசாரணை
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக மருந்து நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான 10 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த் ஜெயின். தொழிலதிபரான இவர், சென்னை புரசைவாக்கம் பகுதியில் தனது குடும்பத்துடன் தற்போது வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் பகுதியில் பெரிய அளவில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
மருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பாக சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையாக தொழிலதிபர் அரவிந்த் ஜெயினுக்கு சொந்தமான அம்பத்தூரில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனம், புரசைவாக்கத்தில் உள்ள வீடு, கே.கே.நகர், தி.நகரில் உள்ள அலுவலகம் என 10 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின் போது தொழிலதிபர் அரவிந்த் ஜெயின் நிறுவன ஆடிட்டராக பணியாற்றி வந்த விஜயராகவன் என்பவர் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது ஆடிட்டர் விஜயராகவன் இறந்து ஓராண்டு ஆவதாக அவரது வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அதைதொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
மேலும், இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சோதனை முடிவில் தான் எத்தனை கோடி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது என்ற முழு விபரங்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.