ஐஐடிக்கு நோ அண்ணா பல்கலைக்கு ஓகே: ஜப்பான் நிறுவனங்கள் போட்டி
சென்னை: இன்று உலகமே தொழில்நுட்பத்தை நம்பிதான் உள்ளது. அந்த அளவுக்கு நவீன வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால், அதற்கெல்லாம் முன்னோடியாக ஜப்பான் நாடு இருந்து வந்தது. சிறிய பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வரை ஜப்பான் தயாரிப்பு என்றாலே அதற்கு நல்ல வரவேற்பு அனைவரிடமும் உள்ளது. இன்று உலகின் பல நாடுகளில் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது ஜப்பான் நாடுதான். நவீன தொழில்நுட்பம், அதிக அளவிலான தயாரிப்பு நிறுவனங்களும் அங்கே உள்ளன.
அந்த நாட்டு மக்களும் சோர்வின்றி உழைக்கக்கூடியவர்கள். அப்படிப்பட்ட ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே குழந்தை பிறப்பை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. எனினும் இளைய தலைமுறையினர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கடந்த ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் 2 மடங்கு உயர்ந்தது.
கணக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை சரிவாக இது கருதப்படுகிறது. எனவே மக்கள் தொகை சரிவால் ஏற்படும் நெருக்கடியை ‘அமைதியான அவசர நிலை’ என அந்நாடு அறிவித்துள்ளது. இந்நிலையில் இருந்து தங்கள் நாட்டை காப்பாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கு முன்னதாக தங்கள் நிறுவனங்களையும், தயாரிப்புகளையும் நிலைநிறுத்த ஜப்பான் மக்களைப்போலவே நம்பிக்கையும், நாணயமாகவும் வேலை செய்யும் நபர்களை அந்த நாடு தேடி வருகிறது.
அதில் ஒருபகுதியாக அவர்கள் இந்தியர்களை தேர்வு செய்துள்ளனர். அதன்படி, ஜப்பான் நாட்டின் பொருளாதார வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகமானது, டெலாய்ட் மற்றும் டேலண்டி ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையே உயர் திறன் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சியை கடந்த வாரம் நடத்தியது. அதற்கு இந்தியாவில் தரவரிசையில் முனிலையில் உள்ள 9 தொழில்நுட்ப பல்கலை கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகமும் இடம்பெற்றிருந்தது. ஒரு வாரம் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கு அழைத்து சென்று அந்த துறையின் வளர்ச்சி மற்றும் வேலையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் படிப்பது, வேலைவாய்ப்புகளை பெறுவது தொடர்பாக 50 ஆயிரம் மாணவ-மாணவிகளை இந்தியா-ஜப்பான் பரிவர்த்தனை செய்து கொள்ள ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
ஜப்பானில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செமி கண்டக்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் திறன் வாய்ந்த இந்தியர்களை ஜப்பான் நிறுவனங்களில் பங்குபெற செய்வது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாக கொண்டுள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக தொழில் கூட்டுறவு மைய இயக்குநர் சண்முக சுந்தரம் கூறியதாவது: ஏற்கனவே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பரிமாற்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சியை கடந்த வாரம் நடத்தியது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பல்கலைக்கழக தொழில் கூட்டுறவு மைய துணை இயக்குநர் ஷிபு சென்றிருந்தார். நம்முடைய 4 பல்கலைக்கழக வளாகம் மற்றும் இணைப்பு கல்லூரிகளின் பாட திட்டங்கள், மாணவர்களின் திறன், அவர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
ஜப்பான் நாட்டில் சாதாரணமாக பணிபுரிய அவர்கள் ஆட்களை தேடவில்லை. நம்பிக்கையும், நீண்ட நாட்கள் வேலை செய்யும் திறன் கொண்டவர்களைத்தான் அவர்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர். வளாக நேர்காணலில் அவர்கள் தேர்வு செய்யும் மாணவர்களின் விவரங்களை பார்க்கையில் ஒரே நிறுவன கல்லூரியில் பயின்றவர்கள் இல்லாதது அவர்களுக்கு பிரச்னையாக உள்ளது.
ஒரு படிப்பை முழுமையாக ஒரு இடத்தில் முடிக்காதவர்கள் எப்படி பொறுமையாக ஒரு நிறுவனத்தில் நீண்ட நாட்கள் வேலை பார்ப்பார்கள் என்ற கவலைதான் அவர்களுக்கு இதுபோன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் அவர்கள் தமிழ்நாட்டில் ஐஐடியை அழைக்காமல் அண்ணா பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே 2024-25ம் ஆண்டுக்கான நேர்காணல் மூலம் அந்நாட்டு நிறுவனங்கள் 72 அண்ணா பல்கலைக் கழக மாணவ-மாணவிகளை தேர்வு செய்துள்ளனர்.
இனி வரும் ஆண்டுகளில் இன்னும் கூடுதலான மாணவர்களை நமது பல்கலை மற்றும் கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்ய உள்ளனர். கோர் இன்ஜினியரிங் படிப்புகள், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் இருந்து திறமையான மாணவர்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் நல்ல வருமானத்துடன் நமது மாணவர்கள் ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் ஜப்பானில் இருந்து 6 துறையை தலைவர்கள் இங்கு வர உள்ளனர். நம்முடைய மாணவர்களுடன் பேசி இங்குள்ள திறன்களைப்பற்றி அறிந்துகொள்ள உள்ளனர். மேலும், அந்த நாட்டில் வேலைவாய்ப்பை பெற்ற மாணவர்களும் பயிற்சியை முடித்து அங்கு செல்ல உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
* ரூ.20 லட்சம் சம்பளம்
2024-25ம் ஆண்டுக்கான நேர்காணல் மூலம் 72 மாணவர்கள் ஜப்பான் நாட்டில் இருந்து கார்களுக்கான இன்ஜின்கள் தயாரிக்கும் கோகநேய் செய்கி (Koganei Seiki) மற்றும் தேர்ட்வேவ் கார்ப்பரேஷன் (Thirdwave Corporation) ஆகிய நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தற்போது மேலும் 19 ஜப்பான் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்க தயாராக உள்ளன. 2026ம் ஆண்டு படித்து வெளியே வரும் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. கோர் இன்ஜினியரிங், ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.