சுவிஸ் ஓபன் டென்னிஸ்: செமி பைனலில் இக்னேஷியோ; அர்ஜென்டினா வீரரை வீழ்த்தினார்
ஜிஸ்டாட்: சுவிஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் நேற்று, பெரு வீரர் இக்னேஷியோ பூஸ் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். சுவிட்சர்லாந்தின் ஜிஸ்டாட் நகரில் சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் பெரு வீரர் இக்னேஷியோ பூஸ், அர்ஜென்டினா வீரர் ரோமன் ஆண்ட்ரெஸ் புருசாகா மோதினர். முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3வது செட் போட்டி நடந்தது. அதை பூஸ் எளிதில் கைப்பற்றினார். அதனால், 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில் அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேன்யுவல் செருண்டோலோ, நார்வே வீரர் கேஸ்பர் ரூட் மோதினர். முதல் செட்டை, செருண்டோலோ சிறப்பாக ஆடி, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். 2வது செட்டை, 6-1 என்ற கணக்கில் ரூட் கைப்பற்றினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்திய செருண்டோலோ, போட்டியில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.