கோப்பை வேண்டுமெனில் ஏசிசி அலுவலகத்திற்கு வாருங்கள்; பிசிசிஐயிடம் மன்னிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை: பாகிஸ்தான் அமைச்சர் அடாவடி
துபாய்: 17வது ஆசிய கோப்பை டி.20தொடரில் துபாயில் கடந்த 28ம் தேதி நடந்த பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வியிடம் இருந்து இந்தியா கோப்பையை பெற மறுத்துவிட்டது. இதனால் அவர் சாம்பியன் கோப்பையை கையோடு எடுத்துச்சென்றுவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த பிசிசிஐ இது தொடர்பாக ஐசிசியிடம் புகார் அளிக்க இருப்பதாக கூறியது.
இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் தலைவராக கோப்பையை நான் வெற்றி பெற்ற அணியிடம் வழங்க அதே நாளில் வழங்க தயாராக இருந்தேன். இப்போதும் கூட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் தான் என்னிடம் கோப்பை வாங்க முன் வரவில்லை. கோப்பையை வாங்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வாருங்கள். வந்து என்னிடம் கோப்பையை பெற்று விட்டு செல்லுங்கள். நான் இன்னும் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். நான் எந்த தவறையும் செய்யவில்லை.
இதனால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. பிசிசிஐயாக இருந்தாலும் சரி வேறு யாரிடமும் சரி மன்னிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை, என தெரிவித்துள்ளார்.