ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு இரட்டையர்களில் ஒருவரின் எஸ்ஐஆர் பதிவு நிராகரிப்பு
*நாகை அருகே பெற்றோர் அதிர்ச்சி
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அருகே இரட்டையர்களில் ஒருவருடைய எஸ்ஐஆர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஒரே முகச்சாயலில் இருப்பதாக அலுவலர்கள் பதிவேற்றம் செய்ய மறுத்துவிட்டதால் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கல்பண்டகசாலை தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி. இவரது மனைவி பல்கிஷ். இவர்களுக்கு இக்ராமுல்லா, இஹ்ஸானுல்லா என்ற 2 மகன்கள் உள்ளனர். இரட்டையர்களான இவர்கள் இருவருக்கும் தற்போது 42 வயதாகிறது. இரண்டு பேரும் வெளியூரில் இருந்தாலும் நாகூரில் இருவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது.
இந்நிலையில் தற்போது நடந்த சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 பேருக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. அவற்றை நிரப்பி அலுவலர்களிடம் வழங்கிய போது, இக்ராமுல்லாவுக்கு மட்டும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த அலுவலர்கள், இஹ்ஸானுல்லாவுக்கு பதிவேற்றாமல் விட்டுவிட்டனர்.இதுதொடர்பாக அவரது பெற்றோர் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டபோது, இரண்டு பேரும் ஒரே நபர்போல் உள்ளனர்.
எனவே இஹ்ஸானுல்லாவுக்கு பதிவேற்றம் செய்ய முடியாது எனக்கூறியதாக தெரிகிறது. இதில் ஏற்கனவே இரண்டு பேருக்கும் தனித்தனியாக வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருப்பதால் இருவரும் வாக்காளித்துள்ளனர் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், அலுவலர்கள் இஹ்ஸானுல்லா பெயரை பதிவேற்றம் செய்ய மறு த்துவிட்டதாக கூறப்படுகிறது.இரட்டையர்களாக பிறந்து ஒரே முகச்சாயலில் இருக்கும் ஒரே காரணத்தால் ஒருவரின் வாக்குரிமையை பறிப்பது எந்த வகையில் நியாயம், ஒரு மகனின் எஸ்ஐஆர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.