ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசை விர்...ரென உயர்ந்த சிராஜ்: கேரியர் பெஸ்ட் ரேங்கிங் பெற்று சாதனை
லண்டன்: ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கான சமீபத்திய தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 889 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
தென் ஆப்ரிக்காவின் காகிஸோ ரபாடா, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மாற்றமின்றி 2, 3வது இடங்களில் உள்ளனர். நியுசிலாந்து வீரர் மேட் ஹென்றி, 3 நிலை உயர்ந்து 4ம் இடத்துக்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட், பாக் வீரர் நோமன் அலி, ஆஸி வீரர்கள் ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், தென் ஆப்ரிக்கா வீரர் மார்கோ யான்சன், ஆஸி வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் முறையே, 5 முதல் 10 இடங்களை வகிக்கின்றனர்.
இப்பட்டியலில், சமீபத்திய இங்கிலாந்து தொடரில் அற்புதமாக செயல்பட்ட இந்திய பந்து வீச்சாளர்கள் முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, தங்கள் வாழ்நாளில் மிகச் சிறந்த ரேங்கிங்குகளை பெற்றுள்ளனர். அந்த தொடரில் 23 விக்கெட்டுகளை சாய்த்த சிராஜ், புள்ளிப் பட்டியலில் 12 நிலை உயர்ந்து 15வது இடத்துக்கு தாவியுள்ளார். அதேபோல், இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா, அதிகபட்சமாக 25 நிலை உயர்ந்து 59வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இங்கிலாந்தின் ஜோஷ் டங், 14 நிலை உயர்ந்து 46வது இடத்தை பிடித்துள்ளார்.
* டெஸ்ட் பேட்டிங் தரவரிசை 5ம் இடம் பிடித்த ஜெய்ஸ்வால்
டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். அந்த அணியின் மற்றொரு அதிரடி வீரர் ஹேரி புரூக் ஒரு நிலை உயர்ந்து 2ம் இடத்தை பிடித்துள்ளார். கடைசி டெஸ்டில் சதம் விளாசிய இந்திய அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 நிலை உயர்ந்து 5ம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3, ஆஸியின் ஸ்டீவ் ஸ்மித் 4, தென் ஆப்ரிக்காவின் டெம்பா பவுமா 6, இலங்கையின் கமிந்து மெண்டிஸ் 7, இந்தியாவின் ரிஷப் பண்ட் ஒரு நிலை தாழ்ந்து 8, நியுசிலாந்தின் டேரில் மிட்செல் 4 நிலை உயர்ந்து 9, இங்கிலாந்தின் பென் டக்கெட் 10 ஆகிய இடங்களில் உள்ளனர்.