ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலியல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ரூட் தனது சகநாட்டவரான ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஹாரி புரூக் கடந்த வாரம்தான் நம்பர் ஒன் பேட்ஸ்மேனானார். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட புதிய டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில், ஹாரி புரூக்(862 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான லூயிஸ் டெஸ்டில் ஜோ ரூட் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக தரவரிசையில் 888 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். லூயிஸ் டெஸ்டில், ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 144 ரன்கள் எடுத்தார். இதில், அவர் முதல் இன்னிங்ஸில்104 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில், 40 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். ஜோ ரூட்டைப் போல லார்ட்ஸ் டெஸ்டில் ஹாரி புரூக் சிறப்பாக செயல்படவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 23 ரன்களும் அடங்கும்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் 867 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 801 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், ரிஷப் பண்ட் 779 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், சுப்மான் கில் 765 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளனர்.