ஐசிசி ஓடிஐ மகளிர் தரவரிசை ஸ்மிருதி மந்தனா மீண்டும் நம்பர் 1
லண்டன்: ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 58 பந்துகளில் 63 ரன் விளாசி இருந்தார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுயபோதும், அந்த ஸ்கோர், ஐசிசி தரவரிசைப் பட்டியலில், 735 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடிக்க மந்தனாவுக்கு உதவியுள்ளது.
மந்தனா, முதன் முதலாக, கடந்த 2019ம் ஆண்டு, மகளிர் ஒரு நாள் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஆஸியுடனான போட்டியில் 64 ரன் குவித்த இந்திய துவக்க வீராங்கனை பிரதிகா ராவல், 4 நிலை உயர்ந்து 42வது இடத்துக்கு சென்றுள்ளார். ஹர்லின் தியோல், 43ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீராங்கனை நாட் சிவர்பிரன்ட் 731 புள்ளிகளுடன் தரவரிசையில் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா வீராங்கனை லாரா உட்வார்ட் 3, ஆஸி வீராங்கனைகள் எலிசி பெரி 4, பெத் மூனி 5, ஆலிசா ஹீலி 6ம் இடங்களை பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹேலி மாத்யூஸ் 7, இங்கிலாந்து வீராங்கனை அமி ஜோன்ஸ் 8, இலங்கை வீராங்கனை சமாரி அத்தப்பட்டு 9, ஆஸி வீராங்கனை ஆஷ் கார்ட்னர் 10ம் இடங்களில் உள்ளனர்.