ஐசிசி ஒன்டே புது தரவரிசை: ஹிட் மேன் ரோகித் தொடர்ந்து முதலிடம்; டாப் 10ல் 3 இந்திய வீரர்கள்
துபாய்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஐசிசி தரவரிசை பட்டியலின் புதிய பட்டியல் நேற்று வெளியாகி உள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10ல் 3 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் தொடர, சுப்மன் கில் 4வது இடத்தில் நீடிக்கிறார். 5வது இடத்தில் இருந்த பாபர் அசாம் மோசமான ஆட்டம் காரணமாக 2 இடம் பின்தங்கி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 6வது இடத்தில் இருந்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தையும், 7வது இடத்தில் இருந்த சரித் அசலங்கா 1 இடம் முன்னேறி 6வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மற்றொரு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 9வது இடத்தில் நீடிக்கிறார். இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா 14 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்துள்ளார். பவுலிங் தரவரிசையில் ரஷித் கான் முதலிடத்திலும், கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஜோப்ரா ஆர்ச்சர் 2 இடங்கள் முன்னேறி 3வது இடத்திலும், குல்தீப் யாதவ் 1 இடம் முன்னேறி 6வது இடத்தையும் பிடித்துள்ளார். பவுலிங் தரவரிசை டாப் 10ல் இந்திய வீரர் குல்தீப் யாதவ் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் தரவரிசையில் அக்சர் பட்டேல் 8வது இடத்திலும், ரவிந்திர ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி 12வது இடத்திலும் உள்ளனர். அணிகள் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 2, 3வது இடத்தில் உள்ளன.