ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசு நடத்துவதாக நீதிபதி கருத்து தமிழ்நாட்டை ஆள்வது முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே: ஐகோர்ட்டில் அரசு தரப்பு பதில்
சென்னை: எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து கவிஞர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.
அப்போது, வைரமுத்து தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஏற்கனவே பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல். ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கு இணையான ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது துரதிஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து, மதியம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தமிழகத்தை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டுமே. நீதிமன்றம் கூறுவதுபோல் ஐஏஎஸ் அதிகாரிகள் அல்ல என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, இதுகுறித்து கருத்து தெரிவிக்கப்போவதில்லை என்று கூறி, இந்த வழக்கில் அரசு தரப்பு 4 வாரங்களில் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.