கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்றேன்: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
ஈரோடு: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்றதாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, பெருங்கடம்பனூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (36). இவர் கேட்டரிங் படித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான பரிமளா (34) என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் வேலை தேடி ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள காசிபிள்ளாம்பாளையத்திற்கு வந்தனர். ஸ்ரீதர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். பரிமளா காசிப்பிள்ளாம்பாளையத்தில் தனியாக ஸ்டுடியோ, இ-சேவை மையம் நடத்தி வந்தார்.
அப்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவருடன் பரிமளாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. ஸ்ரீதருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி பணம் கேட்டு மனைவி பரிமளாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 21ம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு பரிமளா சென்றார். அப்போது அங்கு வந்த ஸ்ரீதர் தம்பி புகழேந்தி, ‘அண்ணன் ஏன் வரவில்லை?’ என பரிமளாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பரிமளா எனக்கும், உனது அண்ணன் ஸ்ரீதருக்கும் ஏற்பட்ட தகராறில் அவரை பிடித்து தள்ளியதில் கீழே விழுந்து இறந்துவிட்டதாகவும், அவரது உடலை தனது ஆண் நண்பர் கார்த்திகேயனுடன் சேர்ந்து, பெருந்துறை, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள ஒரு புதரில் தூக்கி வீசிவிட்டு வந்து விட்டதாகவும் கூறி உள்ளார்.
இது குறித்து ஸ்ரீதர் தம்பி புகழேந்தி அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து பெருந்துறை, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள புதரில் கிடந்த கிடந்த ஸ்ரீதர் சடலத்தை மீட்டனர். இதற்கிடையே போலீசார் விசாரணைக்கு பயந்த பரிமளாவும், கார்த்திகேயனும் தலைமறைவாகினர். இது குறித்து அமைக்கப்பட்ட 2 தனிப்படை போலீசார் நேற்று காலை பெருந்துறை-கோவை சாலை பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்த 2 பேரையும் கைது செய்தனர். போலீசில் பரிமளா அளித்த வாக்குமூலம்: ஸ்ரீதருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கார்த்திகேயனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதற்கு ஸ்ரீதர் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்ேடாம்.
சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகேயன் ஸ்ரீதரை பைக்கில் அழைத்து சென்றார். முதலிகவுண்டன்வலசு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத தோட்டத்தில் இருவரும் மது அருந்தினர். அப்போது ஸ்ரீதரை கார்த்திகேயன் தாக்கி கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி கொலை செய்தார். சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தனது நண்பர் காரை வாங்கிக் சென்று, ஸ்ரீதரை கொலை செய்துவிட்டதாக என்னிடம் கூறினார். சடலம் கிடந்த இடத்துக்கு என்னை அழைத்து சென்றார். பின்னர் நாங்கள் இருவரும், ஸ்ரீதரின் சடலத்தை காரில் எடுத்துச் சென்று பெருந்துறை, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றோம். இவ்வாறு அவர் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.