மதுவாங்க பணம் தராததால் குப்பை சேகரிக்கும் தொழிலாளியை சரமாரியாக அடித்துக் கொன்றேன்: கைதான நண்பர் வாக்குமூலம்
பெரம்பூர்: மதுவாங்க பணம் தராததால் நண்பரை அடித்துக்கொலை செய்தேன் என்று கைதான வாலிபர் தெரிவித்து உள்ளார். சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (30). இவர் குப்பை சேகரிக்கும் தொழிலாளி. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அக்கம் பக்கத்து வீட்டினரிடம் தகராறு செய்துவந்து உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், நேற்று அதிகாலை ஆர்.ஆர்.நகரில் உள்ள டாஸ்மாக் கடை முன் அரிகிருஷ்ணன் படுகாயங்களுடன் கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் சென்று சோதனை செய்தனர். பின்னர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காண்பித்தபோது இறந்துவிட்டார் என்று தெரிந்தது.
இதுகுறித்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மார்பு எலும்புகள் உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது அரிகிருஷ்ணனின் நண்பர் பிரேம்குமார் என்கின்ற கொக்கு (25) வந்து செல்வது பதிவாகியிருந்தது. இவரும் குப்பை சேகரிக்கும் தொழிலாளி. இதையடுத்து பிரேம்குமாரை பிடித்து விசாரித்தனர். பிரேம்குமாரின் செல்போன் மற்றும் ஆதார் கார்டுகளை அரிகிருஷ்ணன் எடுத்துச் சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை மதுவாங்கி கொடுக்கும்படி கேட்டபோது, ‘’என்னிடம் பணம் இல்லை’’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் தகாத வார்த்தைகளால் அவரை திட்டிவிட்டு பிரேம்குமார் சென்றுவிட்டார்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் குடிபோதையில் அரிகிருஷ்ணன் வருவதை பார்த்த பிரேம்குமார், ‘’எனக்கு மது வாங்கி தர மறுத்து நீ மட்டும் குடித்துவிட்டு வந்துள்ளாய்’’ என்று கேட்டு தகராறு செய்ததுடன் அங்கு கிடந்த கட்டையால் அரிகிருஷ்ணன் சரமாரியாக தாக்கியுள்ளார். அரிகிருஷ்ணன் மயங்கி விழுந்ததும் கல்லை எடுத்து அரிகிருஷ்ணன் மார்பில் போட்டுவிட்டு பிரேம்குமார் சென்றுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை வழக்குபதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.