இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்!
மனிதர்கள் உறவுகளை இரத்த உறவுகள் என்று குறிப்பிடுவது வழக்கம். பிறப்பினாலும் திருமணத்தின் மூலமும் ஏற்படும் உறவுகளையே இரத்த உறவுகள் என்கிறோம். உறவுக்கு மட்டுமின்றி உடலுக்கும் இரத்தம் பல்வேறு வகைகளில் துணைபுரிகிறது. உடலில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கும், ஊட்டச்சத்துக்களை விநியோகிப்பதற்கும், கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும் காயம் ஏற்படும்போது இரத்தப்போக்கை நிறுத்துவதற்கும் இரத்தம் பயன்படுகிறது.
ஒரு சராசரி வயது வந்த மனிதனின் உடலில் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இது அவரது உடல் எடையில் சுமார் 7% ஆகும். இந்த அளவு நபரின் எடை, வயது மற்றும் பாலினம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். மனிதர்களுக்குப் பல்வேறு சூழல்களில் (விபத்து, நோய், சிகிச்சை) இரத்த இழப்பு ஏற்படுகிறது. கை, கால்களை இழந்தால் செயற்கை உறுப்புகளைப் பொருத்திக்கொள்ளலாம். ஆனால், இதுவரை செயற்கை இரத்தம் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மனிதர்களின் இரத்த தேவையை மனிதர்களால் மட்டுமே தீர்க்க முடியும். இரத்தத்தை தானமாக வழங்குவதில் பெரும்பாலான மனிதர்களிடம் தயக்கம் நிலவுகிறது. நாம் இரத்தம் கொடுத்தால் நம் இரத்தம் குறைந்துவிடும் என்று பாமர மக்கள் கருதுவது இயல்பு.
இந்த சூழலில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நம் இந்திய மக்களுக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ஆம் தேதி தேசிய தன்னார்வ இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் 1975ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி இந்திய இரத்தப் பரிமாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு இரத்தவியல் சங்கத்தின் மூலம் கொண்டாடப்பட்டது. திருமதி கே.ஸ்வரூப் கிருஷன் மற்றும் டாக்டர் ஜே.ஜி. ஜாலி ஆகியோரின் தலைமையில் 1971ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இந்திய இரத்தப் பரிமாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு இரத்தவியல் சங்கம் முதன்முதலில் நிறுவப்பட்டது.
தன்னார்வ இரத்த தான பிரச்சாரம் குறித்து பொதுமக்களிடையே உள்ள அறியாமை, பயம் மற்றும் தவறான எண்ணங்களை நீக்க இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது அவசியம். இதற்காக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள், தங்கள் மதிப்புமிக்க நேரத்தையும் வளங்களையும் செலவழித்துவருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் மொத்த இரத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் என்கிறது மருத்துவத் துறை. (1 யூனிட் இரத்தத்தின் அளவு 450 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைப்பதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. இன்னும் 60 லட்சம் யூனிட்டுகள் தேவை என்பதால் தன்னார்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வு மூலமே தன்னார்வலர்களை ஈடுபடுத்த முடியும் என்று அரசு நம்புகிறது. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார்38000க்கும் மேற்பட்ட இரத்த கொடையாளிகள் தேவை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம். இரத்த தானம் செய்வதற்கு பலரும் முன் வரலாம். ஆனாலும் அதற்கு தகுதியானவர்கள் மட்டுமே தானம் செய்யமுடியும்.
இரத்த தானம் செய்ய விரும்புபவர் 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்கவேண்டும். இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இரத்த தானம் செய்பவரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு தொற்றுநோய்ப் பாதிப்புக்கும் உள்ளானவராக இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப்படுத்தி இருத்தல் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகளால் போதுமான கொடையாளர்கள் கிடைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
இவை மட்டுமின்றி மேலும் சில நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் இரத்த தானம் செய்பவர்களுக்கு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மது அருந்தியவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் வேண்டும். புகைபிடித்திருப்பின் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது சிறந்தது. இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைக்கலாம். இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். போதிய உணவு, உறக்கம் இரண்டும் மிகவும் அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும்.
இது மட்டுமல்ல சிலர் நினைத்தாலும் இரத்த தானம் கொடுக்க முடியாது. எய்ட்ஸ், மேகநோய், நீரழிவுநோய், இரத்த அழுத்தம், வலிப்பு நோய் போன்ற நோயுடையவர்கள் இரத்ததானம் செய்ய இயலாது. மேலும் இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் இரத்ததானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கண்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இரத்த தானம் செய்பவர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர். இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது. ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. எனவே, தகுதியுள்ள இளைஞர்கள் இரத்த தானம் செய்வதற்கு முன் வரவேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதோடு நாட்டின் முக்கிய வளமான மனித வளம் காக்கப்படும்.
உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்.