நான் முதல்வன் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது: 7.5% உள் ஒதுக்கீடு வரப்பிரசாதம் என கல்வியாளர்கள் மகிழ்ச்சி
சென்னை: பொறியியல் கலந்தாய்வில் 3 ஆம் சுற்று இன்னும் முடிவு அடையாத நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் 95% அதிகமாக நிரம்பியுள்ளது. கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது 2025 - 2026 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதிபெற்ற 421 கல்லூரிகளில் உள்ள 1,90,166 இடங்களை நிரப்புவதற்கு தொழில்நுட்ப கல்வி இயங்கங்கள் பொறியியல் கலந்தாய்வில் நடத்துகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் பொது பிரிவில் 46,248 மாணவர்களும் தொழில் கல்வி பிரிவில் 574 மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். அரசு பள்ளியில் படித்த தொழில் கல்வி மாணவர்களுக்கு ஒரே சுற்றாக நடைபெற்ற கலந்தாய்வில் 171 மாணவர்கள் சேர்க்கை அமையப்பெற்றன. கடந்த ஆண்டு 3 -ம் சுற்றுகளில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 13,286 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்து இருந்தனர்.
இந்த ஆண்டு மூன்றாவது சுற்று கலந்தாய்வு இன்னும் முடிவு அடையாத நிலையில், 95% மேல் இடங்களை நிரம்பியிருப்பது மூலம் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மாணவர்களின் சரியாக சென்று சேர்ந்து இருப்பதை வெளிப்படுத்துவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னோடி திட்டங்களின் ஒன்றான நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் உயர்கல்வி குறித்து ஆலோசனைகளை பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் பெற்றோரை சார்ந்திடாமல் கல்வி கற்கின்றனர். இது போன்ற சிறப்புமிக்க திட்டங்களால் நன்றாக படித்தால் போதும் அரசு துணை நிற்கும் என்ற மாற்றத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.