ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம்: தமிழக அரசு உத்தரவுக்கு வேல்முருகன் வரவேற்பு
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது என்றும், ஓஎன்ஜிசிக்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இது மக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் முடிவு மட்டுமல்ல. தமிழக நிலம், நீர், சுற்றுச்சூழல், மீன்வளம், எதிர்காலத் தலைமுறை, ஆகியவற்றை பாதுகாக்கும் நம்பிக்கையும் ஆகும்.
ஒன்றிணைந்த எதிர்ப்பின் வலிமையை உணர்ந்து, ஹைட்ரோகார்பன் திட்டங்களின் அனுமதியைத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கும் முடிவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளம் கனிந்து வரவேற்கிறது. அதோடு, அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவோடு, தமிழ்நாட்டின் எத்தகையப் பகுதியிலும், எத்தகையக் காலத்திலும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்கிறத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அதனைத் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவாக அறிவிக்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.