ஐதராபாத், பெங்களூரு, அமராவதியை இணைத்து சென்னைக்கு புல்லட் ரயில் பாதை: திட்ட அறிக்கை தயார்
திருமலை: ஆந்திர தலைநகர் அமராவதி வழியாக சென்னை, பெங்களூர், ஐதராபாத் இடையே அதிவேக உயர்மட்ட ரயில் பாதை கட்டுமான பணி மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் முதல் புல்லட் ரயில் வழித்தடம் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே செயல்படுத்த ஏற்கனவே திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா வழியாக ஐதராபாத்-சென்னை மற்றும் ஐதராபாத் - பெங்களூரு வழித்தடங்களில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. ஐதராபாத் முதல் ஷம்ஷாபாத் வரையிலான இந்த 2 வழித்தடங்களிலும் 38.5 கிலோமீட்டர் பொதுவானதாக இருக்கும்.
அதன் பிறகு, சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி தனித்தனி வழித்தடங்கள் இருக்கும். ஐதராபாத்-சென்னை அதிவேக ரயில் பாதைக்கு 744.5 கி.மீ. பாதை சீரமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் தெலங்கானாவில் 236.48 கி.மீ., ஆந்திராவில் 448.11 கி.மீ., தமிழ்நாட்டில் 59.98 கி.மீ. தூரம் பயணிக்கும். இது அமராவதி வழியாக செல்லும். ஐதராபாத்-பெங்களூரு அதிவேக ரயில் பாதையின் பாதை சீரமைப்புக்கு ஏற்கனவே ஆரம்ப ஒப்புதல் கிடைத்துள்ளது. ஐதராபாத்-சென்னை அதிவேக வழித்தடத்திட்டத்திற்காக இரட்டைப்பாதை, லூப் லைன்கள் மற்றும் சைடிங்ஸ் உட்பட மொத்தம் 1,419.4 கிலோமீட்டர் பாதை கட்டப்பட வேண்டும்.
ஐதராபாத்-சென்னை அதிவேக வழித்தடத்தின் ஒரு பகுதியாக, தெலங்கானாவில் 6 நிலையங்களும், ஆந்திராவில் 8 நிலையங்களும், தமிழ்நாட்டில் ஒரு ரயில் நிலையமும் கட்டப்படும். ஐதராபாத்-அமராவதி-சென்னை மற்றும் ஐதராபாத்-பெங்களூர் இடையேயான புல்லட் ரயில் வழித்தடங்கள் நிறைவடைந்து பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையிலான புல்லட் ரயில் திட்டம் கிடைத்தால், இந்த நகரங்களுக்கு இடையே ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் பயணிக்க உதவும்.
* விரைவில் புல்லட் ரயில் திட்டம்: சந்திரபாபு நாயுடு உறுதி
ஐதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூருவை இணைக்கும் புல்லட் ரயில் விரைவில் தொடங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,’ மிக விரைவில், தென்னிந்தியாவிற்கு புல்லட் ரயில் வர உள்ளது. இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஐதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களையும் இணைக்கும். ஐந்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர், இது உலகின் மிகப்பெரிய இணைப்பாகவும், மிகப்பெரிய சந்தையாகவும் மாறவுள்ளது. இது விரைவில் நடக்கப் போகிறது. அது நடக்கும்போது, அதன் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும்’ என்றார்.