சமாதானம் பேச வந்த கணவன்; மனைவியின் கழுத்தை அறுத்த கொடூரம்: 175 கி.மீ. பயணம் செய்து வெறிச்செயல்
பாலசோர்: ஒடிசாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியுடன் சமாதானம் பேசுவதற்காக 175 கிலோ மீட்டர் பயணம் செய்து, அவரது கழுத்தை அறுத்த கணவர் கைது செய்யப்பட்டார். ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அம்ஜத் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவியுடன் சமாதானம் பேசுவதற்காக, 175 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலசோர் நகருக்கு சென்றுள்ளார். அங்கு மனைவியைச் சந்தித்துப் பேசியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அம்ஜத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக அம்ஜத்தைப் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அப்பெண், முதலில் பாலசோர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூரத் தாக்குதல் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.