ஆவடியில் இன்று காலை அரசு டாக்டர் ஓட்டி வந்த கார் மோதி கணவன், மனைவி பலி
ஆவடி: ஆவடி அருகே திருவேற்காட்டில் இன்று காலை அரசு டாக்டர் ஓட்டி வந்த கார், முன்னால் சென்ற பைக்கின்மீது வேகமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற கணவன், மனைவி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அரசு டாக்டரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர். ஆவடி அருகே திருவேற்காடு, பள்ளிக்குப்பம், ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் அறிவரசன் (41). தனியார் கால்சென்டர் ஊழியர். இவரது மனைவி சரண்யா (36). இவர், திருவள்ளூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இத்தம்பதிக்கு இரட்டை மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தனது மனைவியை பைக்கில் ஏற்றிக்கொண்டு, இன்று காலை ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அறிவரசன் சென்றுள்ளார், ஆவடி, வசந்தம் நகர் அருகே இத்தம்பதியின் பைக்மீது பின்னால் வந்த கார் வேகமாக மோதியது.
இவ்விபத்தில், தம்பதிகளான அறிவரசன், சரண்யா ஆகிய 2 பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர் அங்கு விபத்தில் பலியான அறிவரசன், சரண்யா ஆகிய 2 பேரின் சடலங்களை கைப்பற்றினர். பின்னர் அச்சடலங்களை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த அரசு டாக்டர் பாரிமார்க்ஸ் என்பவரும் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வரும் அரசு டாக்டர் பாரிமார்க்ஸ் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.