7 ஆண்டில் திருமண வாழ்க்கை முடிந்தது; ஹாலிவுட் கணவரை பிரிகிறார் மாஜி உலக அழகி: ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ்: அல்பேனியா முன்னாள் உலக அழகி ஏஞ்சலா மார்டினி, தனது கணவரை விவாகரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அல்பேனியா நாட்டின் முன்னாள் உலக அழகியான ஏஞ்சலா மார்டினிக்கும், ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான டிராகோ சவுலேஸ்குவுக்கும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கைரி என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், டிராகோ சவுலேஸ் தனது சொந்த நாடான ருமேனியாவில் சில சட்ட சிக்கல்களில் சிக்கியதாக ஏற்கனவே சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், 7 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி ஏஞ்சலா மார்டினி நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கணவருடன் ஏற்பட்ட ‘தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள்’ காரணமாக பிரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாங்கள் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களது 3 வயது குழந்தை கைரியை இருவரும் சேர்ந்து வளர்க்கும் வகையில் கூட்டு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தனது செலவுகளுக்காக கணவர் டிராகோ சவுலேஸ்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
