கள்ளக்காதலியை மணக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2வது மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவன்: பீகாரில் பயங்கரம்
நாளந்தா: பீகாரில் காதலியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டாவது மனைவியை கணவரே எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விகாஸ் குமார் என்பவருக்கும், சுனிதா தேவி (25) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், விகாஸ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை விவாகரத்து செய்யாத உண்மை, திருமணத்திற்குப் பிறகே சுனிதாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது.
இருப்பினும், விகாஸ் குமார் குடும்பத்தினர் சமாதானம் செய்து சுனிதாவை சேர்ந்து வாழ வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் பிறந்த சிறிது காலத்திலேயே இறந்துவிட்டன. இந்நிலையில், விகாஸ் குமார் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுனிதா, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
கடந்த மாதம் துர்கா பூஜை பண்டிகைக்கு முன்பு, சுனிதாவின் வீட்டிற்குச் சென்ற விகாஸ் குமார், அவரை சமாதானம் செய்து மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்த சூழலில், நேற்று அதிகாலை 1 மணியளவில் சுனிதா தனது சகோதரருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், ‘என் மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு கதவை சாத்தி வைத்து பூட்டிவிட்டார். பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு, பற்றவைத்த தீக்குச்சியை வீசிவிட்டார். நான் உயிர் பிழைக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுனிதாவின் குடும்பத்தினர், அவரது கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது, விகாஸ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சுனிதாவின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். சுனிதாவின் குடும்பத்தினரைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போலீஸ் அனில் குமார் பாண்டே கூறுகையில், ‘எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரைத் தேடி வருகிறோம்’ என்றார்.