மனைவி மீதான கோபத்தில் ஆட்டோ கண்ணாடிகளை நொறுக்கிய கணவன் கைது
பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி மேகசின்புரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (35). இவர் ஆட்டோ டிரைவர். நேற்றிரவு வேலை முடித்துவிட்டு வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியிருந்தார். இன்று அதிகாலை 2 மணி அளவில் ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டு தினேஷ் வந்து பார்த்தபோது ஆட்டோ மற்றும் ஆட்டோ அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தினேஷ் கொடுத்த புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வியாசர்பாடி நேரு நகர் 3வது தெருவை சேர்ந்த வேலு (27) கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், வேலு தனது மனைவி மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து வேலுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.