பசியில்லா தமிழகம்
உலகளவில் தினமும் 73 கோடிக்கு மேல் பட்டினியால் வாடுவதாக கூறப்படும் அறிக்கை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, சில ஆப்ரிக்க நாடுகள் அபாயம் நிறைந்த பட்டினி நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட், ஜெர்மனியின் வெல்த் ஹங்கர் லைப் இணைந்து, சர்வதேச அளவில் 127 நாடுகளில் பட்டினி குறியீடு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் பொருளாதாரரீதியாக நலிவடைந்து வரும் இலங்கை(60), வங்கதேசம்(81), பாகிஸ்தான்(102), ஆகிய நாடுகளை விட இந்தியா பின்னால் இருப்பதுதான். இந்திய அளவில் 2.5 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, 5 வயதிற்குள் இறப்பதாக வரும் ஆய்வு மேலும் கவலை அளிக்கிறது. இந்த ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு மறுத்தாலும், இந்திய அளவில் பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் பட்டினியால் வாடுவோர் அதிகளவில் உள்ளனர்.
இதையெல்லாம் மனதில் கொண்டுதான், திராவிட மாடல் அரசு காலை உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த 2022, செப்.15ம் தேதி மதுரையில் துவங்கிய இத்திட்டம் விரிவடைந்து தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் தினமும் 20.59 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவதாக அரசுக்குறிப்பு தெரிவிக்கிறது. இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.600 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. தாயுள்ளத்தோடு கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை தமிழக மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
காலை பட்டினியோடு பள்ளிக்கு வரும், மாணவர் எப்படி நன்றாக படிக்க முடியும்? எப்படி ஆரோக்கியத்தோடு போட்டி நிறைந்த இந்த உலகில் போராட முடியும்? இதனால்தான் ஒரு மாநிலத்தில், நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகளவு உருவாகின்றனர். அனைவரும் கல்வி கற்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள வறுமை நிலையை போக்க வேண்டும். இதை மனதில்கொண்டே மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், , மாணவர்களுக்கு தவப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பசியோடு பள்ளி வரும் ஒரு குழந்தை, கல்வி கற்பதில் ஆர்வம் காட்ட முடியாது.
இந்நிலை மாற விருட்சமாக தோன்றிய ஒரு சிந்தனையே, தற்போது தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் என்ற ஆலமரமாக வளர்ந்து கிளைகளை பரப்பியுள்ளது. திராவிட மாடல் அரசு கல்விக்காக எத்தனையோவிதமான திட்டங்களை உணர்வுபூர்வமாக செய்து வருகிறது. அதேநேரம் உணவு பூர்வமாகவும் ஒரு திட்டத்தை கொண்டு வந்து, பிற மாநில முதல்வர்களும் தங்களது மாநிலத்தில் இத்திட்டத்தை கொண்டு வர வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் விதைத்துள்ளது.
‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் மகாகவி பாரதியார். பல கோடி பேர் உணவில்லாமல் பரிதவிக்கும் நிலையில், எத்தனை ஜகத்தினை நம்மால் அழித்திட முடியும்? அதேநேரம் தமிழக அரசு போல பசி போக்கும் இதுபோன்ற திட்டங்களை ஒவ்வொரு மாநிலமும் செயல்படுத்தினால் பட்டினி நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நிரந்தரமாக நீக்கி விடலாம். அதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். பசியில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி நம் மாநிலம் மட்டுமின்றி, இந்தியாவும் முன்னேற வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாகும்.