வயிற்றுப்பசியை போக்குவதற்கான திட்டம் மட்டுமில்ல மாணவர்களின் அறிவுப்பசியை போக்கும் ஒரு மகத்தான திட்டம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வயிற்றுப்பசியை போக்குவதற்கான திட்டம் மட்டுமில்ல, இது மாணவர்களுடைய அறிவுப்பசியை போக்குவதற்கான ஒரு மகத்தான திட்டம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை, மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கல்வி மட்டுமில்ல, கல்வியுடன் காலை உணவு, கல்விக்கு உதவித்தொகை என்று நம்முடைய திராவிட மாடல் அரசு கல்விக்காக செயல்படுத்தி வருகின்ற சாதனைத் திட்டங்களை இன்றைக்கு ஒட்டுமொத்த நாடும் பாராட்டி கொண்டிருக்கிறது. நம்முடைய திட்டங்களை பிற மாநிலங்கள் பாராட்டுவது மட்டுமல்ல, அதை பாலோவும் செய்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த காலை உணவுத்திட்டத்தை, இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகள் சிலவற்றிலும் இன்றைக்கு பின்பற்ற ஆரம்பத்திருக்கின்றார்கள். 37,416 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் 21 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றார்கள். இங்கே மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிக அளவில் வந்து இருக்கின்றீர்கள்.
முன்பெல்லாம், பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்களுக்கு, காலையில எழுந்து, டிபன் செய்து, மாணவர்களை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று, ஒரே பரபரப்பாகவும் பதட்டமாகவும் இருக்கும். ஆனால், இன்றைக்கு அந்த நிலைமையை தலைகீழாக மாற்றியிருக்கின்றார் நம்முடைய முதல்வர். உங்க பிள்ளைகள் இனி பள்ளியிலேயே ரிலாக்ஸா காலை உணவு சாப்பிட்டு விட்டு, பாடத்தை கவனிக்க முடியும். இது வெறும் வயிற்றுப்பசியை போக்குவதற்கான திட்டம் மட்டுமில்ல, இது மாணவர்களுடைய அறிவுப்பசியை போக்குவதற்கான ஒரு மகத்தான திட்டம். இங்கே இருக்கின்ற ஆசிரியர்களுக்கு மட்டும் ஒரு கோரிக்கை. மாணவர்களை படிக்க மட்டுமே சொல்லாமல், விளையாட்டு நேரத்தில் விளையாடவும் நீங்கள் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், மாணவர்களுடைய, உடல் நலம் நன்றாக இருந்தால் தான், அவர்களுடைய மனநலமும் நன்றாக இருக்கும். இந்த காலை உணவுத் திட்டத்தை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.