பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு?
திருவாரூர்: திருவாரூர் அடுத்த காரியாங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. தலைமை ஆசிரியராக அன்புசெல்வி பணியாற்றி வருகிறார். சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் 2 நாள் பள்ளி பூட்டிருந்தது. அன்புச்செல்வி இன்று (14ம் தேதி) காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வந்தார். அப்போது சமையலறை பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து சமையலறைக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அறையில் மது குடித்த பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் சமைத்து சாப்பிட்டதற்கான அறிகுறிகள் இருந்தன.
இதையடுத்து சமையலறைக்கு வெளியே வந்து பார்த்தபோது 500 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியின் மூடி திறந்து கிடந்தது. இதனால் குடிநீர் தொட்டிக்குள் பார்த்தபோது மனித கழிவு கலந்தது போன்று காணப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ், செந்தில் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீரை பரிசோதனை செய்ய போலீசார் அனுப்பி உள்ளனர்.