10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?
‘பள்ளியில் நான்’ ‘வீட்டில் நான்’ ‘மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அறங்கள்’ மற்றும் ‘நன்மைகள்’ போன்று சொந்தமாக விடை அளிக்கும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் தங்கள் கோணத்தில் சொந்தமாக எழுதினால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். விடைக்கேற்ற வினா அமைத்தல், இரண்டு மதிப்பெண் வினாக்களில் கேட்கப்படுகிறது. மிகவும் எளிமையான பகுதியான இதனை மாணவர்கள் தவற விடக்கூடாது. கலைச்சொல் அறிவோம் பகுதியில் இருந்து இரண்டு ஆங்கிலச் சொற்கள் கொடுத்து தமிழில் மொழிபெயர்க சொல்லும் வினாக்கள் கட்டாயம் கேட்கப்படும். பத்தி கொடுத்து மூன்று கேள்விகள் கேட்கப்படும் வினாவும் மிக எளிமையானது. காட்சியை கொடுத்து கவிதை எழுதும் பகுதியைச் சற்று முயற்சி செய்து சிறப்பாக எழுதினால் ஐந்து மதிப்பெண்கள் நமக்கு எளிமையாக கிடைத்துவிடும்.
தமிழ்ப் பாடத்தைப் பொறுத்தவரை சொந்தமாக விடையளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது, கட்டுரை எழுதுவது, ஆகியவற்றை பலமுறை பயிற்சி எடுத்துக்கொள்வது அவசியம். நூலக உறுப்பினர் படிவம், மேல்நிலைச் சேர்க்கை விண்ணப்பப்படிவம், பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப்பட்டியல், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினர் சேர்க்கைப் படிவம் ஆகிய நான்கில் ஒன்று வரவாய்ப்புள்ளது. இவற்றில் அதிக பயிற்சி எடுத்துக் கொண்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். வாழ்த்துக்கள்!