வீட்டுமனை பிரச்னையில் முன்விரோதம்: பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்: வலைதளங்களில் வீடியோ வைரல்
பண்ருட்டி: பெண்ணின் மேலாடைகளை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்து உறவினர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லித்தோப்பு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமர்(63), கூலி தொழிலாளி. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த உறவினர்களான வைத்தீஸ்வரன், சின்னையாள், ஜெயந்தி, அனுராதா ஆகியோருக்கும் இடையே வீட்டுமனை சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று நெல்லித்தோப்பு ஓடை பகுதியில் நடந்து சென்ற ராமரை வழிமறித்து, வைத்தீஸ்வரன், சின்னையாள், ஜெயந்தி, அனுராதா ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ராமரின் தம்பி சிங்காரவேல் மனைவி செல்வராணியின் மேலாடைகளை களைந்து மரத்தில் கட்டி வைத்து, உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராமர் மற்றும் செல்வராணி ஆகியோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து காடாம்புலியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன், சின்னையாள், ஜெயந்தி, அனுராதா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அனுராதாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான வைத்தீஸ்வரன், சின்னையாள், ஜெயந்தி ஆகியோரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் ஆடைகளை களைந்து பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.