ஓசூர் அருகே அதிகாலை சோகம் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி நான்கு வாலிபர்கள் பரிதாப பலி: தல தீபாவளி கொண்டாட கனடாவில் இருந்து வந்த புதுமாப்பிள்ளையும் சாவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், பேரண்டப்பள்ளியில், ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை பின் தொடர்ந்த நிலையில், கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் நிலை தடுமாறிய நிலையில், காருக்கு பின்னால் வந்த சரக்கு லாரி, மின்னல் வேகத்தில் அந்த கார் மீது மோதியது. இதில், சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்ட கார், அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த முகிலன்(30), பெங்களூரு சிக்கநாகமங்கலம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன்(27), ஈரோட்டை சேர்ந்த மதன்குமார்(27), சேலத்தை சேர்ந்த கோகுல்(27) ஆகிய 4 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கார் மீது மோதியதில் நிலை தடுமாறிய லாரி, அவ்வழியாக சென்ற ஒரு சரக்கு வாகனத்தின் மீது மோதியது. மேலும், அவ்வழியாக வந்த மற்றொரு கார், கன்டெய்னர் என 6 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால், பேரண்டப்பள்ளி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உயிரிழந்த 4 பேரும் நண்பர்கள். கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய மதன்குமாரை, பெங்களூருவில் இருந்து அழைத்து கொண்டு, காரில் திரும்பி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.
மதன் என்கிற மதன்குமார், கனடா நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான், ஈரோட்டில் திருமணம் நடந்தது. பணி நிமித்தமாக மனைவியை ஈரோட்டிலேயே விட்டு விட்டு, கனடாவிற்கு சென்ற மதன்குமார், தல தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். தீபாவளி முடிந்து தனது மனைவியை கனடாவிற்கு அழைத்து செல்ல இருந்த நிலையில், விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.