ஓசூர் அருகே பயங்கரம் தவாக நிர்வாகி ஓட, ஓட வெட்டிக்கொலை
ஓசூர்: ஓசூர் அருகே தவாக நிர்வாகி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சொங்கோடசிங்கனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கர் (35). பன்றி வளர்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று அஞ்சாளம் கிராமத்தில், ரவிசங்கரை மர்மநபர்கள் இருவர் ஓட, ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பினர்.
அப்பகுதியில் இருந்தவர்கள், ரவிசங்கரை மீட்டு ராயக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே, ரவிசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.