ஓசூர் அருகே சீதாராம் மேடு சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஓசூர் : ஓசூர் அருகே சீதாராம் மேடு சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அருகே சீதாராம்மேடு பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்திற்கு அவசர கதியில் செல்பவர்கள் மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் தொழில் முனைவோர்கள், அதிகாரிகளும் அந்த வழியாக மின்னல் வேகத்தில் பயணப்பட்டு வருகின்றனர்.
இதனால், இலகுரக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை களைய பத்தலப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்தே, கனரக வாகனங்களை ஒரு சாலையிலும், இலகுரக வாகனங்களை ஒரு சாலையிலும் செல்ல அனுமதிக்க வேண்டும். பத்தலப்பள்ளி அருகே இலகுரக வாகனங்களை பிரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வழியாக செல்லும் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனகரக வாகனங்கள் செல்கிறது.
இதனால், ஓசூர் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் கடந்த 21ம் தேதி இணைப்பு பகுதி விலகியதால், தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்தனர்.
இதனால், வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுப்பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சீதாராம் மேடு பகுதியில் அதிகாலை, மாலை நேரத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பத்தலப்பள்ளி அருகே இலகுரக மற்றும் கனரக வாகனங்களை பிரித்து அனுப்ப வேண்டும்.
சீதாராம் மேடு பகுதியில் அதிகாலை வேளையில் வாகன நெரிசல் ஏற்படும் சமயங்களில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் தவித்து வருகின்றனர்.
எனவே, பத்தலப்பள்ளி அருகே கனரக வாகனங்களையும், இலகுரக வாகனங்களையும் பிரித்து அனுப்பி, சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.