ஓசூர் அருகே விடுதி குளியல் அறையில் ரகசிய கேமராக்கள்; தனியார் கம்பெனி பெண் தொழிலாளர்கள் போராட்டம்: பீகாரைச் சேர்ந்த பெண் கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயக்கோட்டை அடுத்த வன்னியபுரம் கிராமத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் 6000 நிரந்தர பெண் தொழிலாளர்களுக்கு லாலிக்கல் என்ற இடத்தில் விடுதி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விடுதியின் 8வது பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்து பெண் தொழிலாளர்கள் குளிப்பதை படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து பெண் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நேற்றிரவு விடுதியில் தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விடுதி முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து ஓசூர் சப் கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, மாவட்ட எஸ்பி தங்கதுரை மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் சமாதானமடைந்த பெண்கள் கலைந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த பீகாரைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நீலு குமாரி குப்தா (23) ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை, அவரின் நண்பரான சதீஷ் குமார் என்பவருக்கும் பகிர்ந்துள்ளதால், அவரையும் கைது செய்ய போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.