ஓசூரில் ரூ.450 கோடியில் அமையும் டெல்டா நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
கிருஷ்ணகிரி: ஓசூரில் ரூ.450 கோடியில் அமையும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள சிப்காட் குருபரபள்ளி தொழிற் பூங்காவில் அமைந்துள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 450 கோடி ரூபாய் முதலீட்டில் 400-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 2 விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட உற்பத்தி வரிசையையும் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
தைவான் நாட்டைச் சேர்ந்த டெல்டா குழுமம் மின்சார மற்றும் எரிசக்தி மேலாண்மை தீர்வுகள் மற்றும் அதிநவீன மின்னணுப் பொருட்கள் உற்பத்தி ஆகிய துறைகளில், உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. ஓசூரில் உள்ள இக்குழுமத்தின் துணை நிறுவனம் – டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், எரிசக்தி விநியோகம், DC விசிறிகள் மற்றும் Switch-Mode எரிசக்தி விநியோக பொருட்களை உற்பத்தி செய்து, உள்நாட்டில் விற்பனையும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றது.
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் இரண்டு புதிய விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் புதிய மேம்பட்ட உற்பத்தி வரிசை விரிவாக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள சிப்காட் குருபரபள்ளி தொழிற் பூங்காவில் அமைந்துள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 450 கோடி ரூபாய் முதலீட்டில் 400-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 2 விரிவாக்க திட்டங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டி, ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட உற்பத்தி வரிசையையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.மதியழகன், ஒய். பிரகாஷ், டி.ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய். இ.ஆ.ப., வழிகாட்டி நிறுனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், இ.ஆ.ப., கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சி.தினேஷ் குமார், இ.ஆ.ப., டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பிங் செங், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தாய்லாந்து நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் NG, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தைவான் நிறுவனத்தின் துணைத் தலைவர் மார்க் கோ, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பென்ஜமின் லின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.