ஓசூர் பகுதியில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து மண் தொட்டியில் நாற்றுகளை வளர்க்க விவசாயிகளிடையே விழிப்புணர்வு
ஓசூர் : ஓசூர் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மண் தொட்டியில் நாற்றுகளை வளர்க்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் நல்ல குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது. இதனால், நல்ல மண் வளம் காணப்படுவதால், விவசாயிகள் பசுமை குடில் அமைத்தும், திறந்த வெளியிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்கின்றனர்.
அதேபோல், காய்கறி வகைகளில் பீன்ஸ், முட்டைகோஸ், தக்காளி, கேரட் உள்ளிட்டவற்றை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில், சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால், காய்கறி, மலர்கள் போன்ற நாற்றுகளை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து வளர்த்து, அதனை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால், நாற்றுக்களை பிளாஸ்டிக் கவர்களில் வளர்த்து கொடுப்பதால் அதனை வாங்கி செல்லும் விவசாயிகள், விளைநிலங்களில் பிளாஸ்டிக் கவர்களை வீசிச் செல்லும் நிலை உள்ளது. இதனால், மண் மலட்டுத்தன்மையாக மாறி விடுகிறது.
மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மண் தொட்டிகளில் நாற்றுகளை வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் கவர்களில் நாற்றுகளை வளர்த்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை ஒருபுறமும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது ஒரு புறமும் இருந்தாலும், பிளாஸ்டிக் கவர்களில் நாற்றுகளை வளர்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மரங்கன்றுகளை விளை நிலங்களில் நடவு செய்யும்போது, பிளாஸ்டிக் கவரை தனியாக எடுத்து வீசுகின்றனர். இதனால், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, மண் தொட்டியில் நாற்று வளர்ப்பதை தோட்டக்கலைத்துறையினர் ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், மண் தொட்டியில் நாற்று வளர்ப்பதால், நலிந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும் என்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாய தொழிலுக்கு மாற்று தொழிலாக நாற்று வளர்க்கும் தொழில் அதிகரித்துள்ளது. பல்வேறு வகையான நாற்றுகளை வளர்த்து, அதனை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். நாற்றுகளை மண் தொட்டியில் வளர்த்தால் கூடுதல் செலவாகும்.
அதனை நாற்றுகள் மீது வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும்போது, வாங்குவதற்கு தயங்கும் நிலை உள்ளது. அதே வேளையில், பிளாஸ்டிக் கவர்களில் நாற்று வளர்ப்பதால் செலவு குறைகிறது. மண் தொட்டியில் நாற்று வளர்க்க வேண்டும் என்றால், தோட்டக்கலைத்துறையினர் மானியம் வழங்க வேண்டும் என்றனர்.