தமிழ்நாட்டில் 4 இடங்களில் தோழி விடுதிகள் கட்டுவதற்கு டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு!!
சென்னை: தமிழ்நாட்டில் பெறும் வரவேற்பைப் பெற்ற தோழி விடுதிகளை உதகை, திருப்பத்தூர், திருவாரூர், வீர சோழபுரம் பகுதிகளில் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், உத்தியோகபூர்வ வருகைக்காகவும் செல்லும் பணிபுரியும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முயற்சியாக "தோழி பெண்கள் தங்கும் விடுதி" தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த தோழி மகளிர் விடுதியானது திறக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 12 இடங்களில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் தோழி மகளிர் விடுதிகள் கட்டப்படும் என மகளிர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து உதகை, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீர சோழபுரம், நாமக்கல்லில் விடுதிகள் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 12 தோழி விடுதிகள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் உள்ளிட்ட இடங்களில் 12 விடுதிகள் கட்டப்படுகின்றன. இதை தொடர்ந்து உதகை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தோழி விடுதிகள் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது.